

மாநிலங்களுக்கு வழங்கும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்து வழங்குவதால் ரேஷன் அட்டைதார்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படுகிறது எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் ஒரு ரேஷன் அட்டைக்கு 2 லிட்டர் மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வந்தது. பின்னர் அந்த அளவு குறைக்கப்பட்டது. தற்போது மத்திய அரசு 20% ஆக மண்ணெண்ணெய் வழங்குவதைக் குறைத்துள்ளதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அளவும் குறைக்கப்படுகிறது. இதை அறிவிப்பாக மாவட்டந்தோறும் தெரிவிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
2011-ம் ஆண்டு 52 ஆயிரத்து 806 கிலோ லிட்டர் மண்ணெண்ணெயைத் தமிழகத்துக்கு மத்திய அரசு அளித்தது. அதன்பின் 2012-ம் ஆண்டு 39 ஆயிரத்து 429 கிலோ லிட்டராகக் குறைந்தது. இந்நிலையில் 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 16 ஆயிரத்து 148 லிட்டராகக் குறைக்கப்பட்டது.
இது 2019 செப்டம்பர் மாதத்தில் 10 ஆயிரத்து 624 லிட்டராக மேலும் குறைக்கப்பட்டது. இவ்வாறாக மத்திய அரசு மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டைக் குறைத்ததால், ஒரு சிலிண்டர் வைத்திருப்பவர்களுக்கு மாதம் 3 லிட்டர் என வழங்கப்பட்ட மண்ணெண்ணெய் 1 லிட்டராக குறைக்கப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. (இது குடும்பத்தினர் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கூடுதலாக வழங்கப்படும்)
மண்ணெண்ணெயைப் பொறுத்தவரை, குடும்ப அட்டைதாரர்கள் வசிப்பிடம் மற்றும் அவர்கள் பெற்றுள்ள சமையல் கேஸ் சிலிண்டர் எண்ணிக்கை அடிப்படையில் 3 லிட்டர் முதல் 15 லிட்டர் வரை வழங்கப்படுகிறது. குறிப்பாக, ஒரு சிலிண்டர் மட்டுமே வைத்திருக்கும் குடும்ப அட்டைதாரர்களுக்கு அதிகபட்சமாக 3 லிட்டர் மட்டுமே வழங்கப்படுகிறது.
இரண்டு சிலிண்டர்கள் பெற்றிருந்தால் அவர்களுக்கு மண்ணெண்ணெய் கிடையாது. மலைப் பிரதேசத்தில் வாழ்வோர், கேஸ் இணைப்பு பெறாதவர்களுக்கு 15 லிட்டர் வரை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசு தற்போது தமிழகத்திற்கு 20 சதவீதம் மட்டுமே மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதுகுறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை சார்பில் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர்களுக்குச் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அதில், “மத்திய அரசால் தமிழகத்திற்கு வழங்கப்படும் பொது விநியோகத் திட்ட மண்ணெண்ணெய் அளவு படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருகிறது. தற்போது மாநிலத்தின் மொத்தத் தேவையில் 20 சதவீதம் மட்டுமே ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மத்திய அரசால் மாநிலத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு அளவின்படி அனைத்து மாவட்டத்திற்கும் மண்ணெண்ணெய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
எனவே, தற்போது மத்திய அரசு அளவைக் குறைத்துள்ளதால் மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து ரேஷன் அட்டைதாரர்களிடம் புகார்கள் வருவதைத் தவிர்ப்பதற்காக, மாவட்ட வாரியாக ஒதுக்கீட்டின் அடிப்படையில் மண்ணெண்ணெய் பெறத் தகுதியான குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் வழங்கல் அளவு குறித்து அனைத்து ரேஷன் கடைகள் மற்றும் மண்ணெண்ணெய் வழங்கும் நிலையங்களிலும் குடும்ப அட்டைதாரர்கள் அறியும் வகையில் விளம்பரம் செய்ய வேண்டும்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.