

கோவை அன்னூர் அருகே ஏடிஎம் மைய இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிக்க ஒருவர் முயன்ற நிலையில், அது முடியாததால் அருகிலிருந்த இயந்திரங்களை உடைத்து, சேதப்படுத்திச் சென்றார்.
கோவை - மேட்டுப்பாளையம் சாலை, அன்னூர் அருகேயுள்ள ஒற்றர் பாளையத்தில் தனியார் வங்கி உள்ளது. இந்த வங்கியின் அருகே, ஏடிஎம் மையம் உள்ளது. இந்த ஏடிஎம் மைய வளாகத்தில் பணம் , காசோலை செலுத்தும் இயந்திரம், பாஸ்புக் பதிவு செய்யும் இயந்திரம் போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் இன்று (14-ம் தேதி) அதிகாலை, இந்த ஏடிஎம் மையத்தில் இருந்து அலாரச் சத்தம் கேட்டது. அங்கு வங்கி அருகே இருந்த காவலாளி ரங்கசாமி வந்து பார்த்தபோது, ஏடிஎம் மையத்துக்குள் இருந்து வெளியே வந்த மர்ம நபர், தப்பி ஓடிச் சென்றார். காவலாளி உள்ளே சென்று பார்த்தபோது, ஏடிஎம் மையத்தில் உள்ள கேமரா இணைப்புகள், மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு இருந்தன.
பணம் செலுத்தும் இயந்திரம், பாஸ்புக் பதிவு செய்யும் இயந்திரம், காசோலை செலுத்தும் இயந்திரங்களின் முன்பக்கக் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. சிசிடிவி கேமரா மீது துணி போட்டு மறைக்கப்பட்டு இருந்தது. லட்சக்கணக்கில் பணம் இருந்த ஏடிஎம் இயந்திரத்தையும் உடைக்க முயன்றது தெரிந்தது. அதிர்ச்சியடைந்த காவலாளி ரங்கசாமி, வங்கி நிர்வாகத்துக்கும், அன்னூர் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தார்.
போலீஸார் விசாரணை
அன்னூர் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரித்தனர். அதில் ஏடிஎம் மையத்தை உடைத்து, அதிலிருந்த பணத்தைக் கொள்ளையடிக்க முயன்றவர்கள், அது முடியாததால், அருகில் இருந்த மற்ற இயந்திரங்களை உடைத்துச் சேதப்படுத்திவிட்டுச் சென்றிருக்கலாம் எனத் தெரியவந்தது. மேலும், கொள்ளை முயற்சியில் ஈடுபட்டது ஒரு நபர் மட்டுமா? அல்லது அவரது கூட்டாளிகள் யாராவது வந்து இருந்தனரா என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.
ஏடிஎம் இயந்திரத்தை உடைக்க முடியாததால், அதிலிருந்த பணம் தப்பியது. இந்தச் சம்பவம் தொடர்பாக வங்கி மேலாளர் அளித்த புகாரின் பேரில், அன்னூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.