Published : 14 Apr 2021 05:01 PM
Last Updated : 14 Apr 2021 05:01 PM

மங்களூருவில் மீன்பிடிப் படகு மீது கப்பல் மோதியதால் 2 தமிழர்கள் உட்பட மூவர் உயிரிழப்பு: மாயமான 9 மீனவர்களைத் தேடும் பணி தீவிரம்

விபத்துக்குள்ளான படகு.

ராமேசுவரம்

மங்களூருவில் மீன்பிடிப் படகு மீது, சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்குக் கப்பல் மோதியதால் 2 தமிழர்கள் உட்பட மூவர் உயிரிழந்தனர். இருவர் உயிரோடு மீட்கப்பட்ட நிலையில், மாயமான 9 மீனவர்களைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பேபூரில் இருந்து 'ஐ.எஃப்.பி. ரபா' என்ற படகில் தமிழகத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள், அசாம் மற்றும் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 7 மீனவர்கள் உள்பட 14 மீனவர்கள் கடந்த வாரம் ஆழ்கடல் மீன் பிடிப்பிற்காகக் கடலுக்குச் சென்றனர்.

மீனவர்கள் செவ்வாய்க்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் கர்நாடக மாநிலம் மங்களூரு கடற்கரையில் இருந்து 43 நாட்டிக்கல் மைல் தொலைவுக்கு அப்பால் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது சிங்கப்பூரில் இருந்து வந்த ஏபிஎல் லீ ஹாவ்ரே (APL LE HAVRE) என்ற சரக்குக் கப்பல், மீனவர்களின் படகு மீது வேகமாக மோதியது. இதில் படகு முற்றிலும் சேதமடைந்து நீரில் மூழ்கிய நிலையில், அதில் இருந்த 14 மீனவர்களும் காணாமல் போயினர்.

விபத்துக்குள்ளான படகின் அருகில் தத்தளித்துக் கொண்டிருந்த ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தைச் சேர்ந்த வேல்முருகன், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த சுனில்தாஸ் ஆகிய இரண்டு மீனவர்களை சரக்குக் கப்பல் ஊழியர்கள் உயிரோடு மீட்டனர்.

இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த கடலோரக் காவல் படை அதிகாரிகள், க‌ப்பல், படகு, ஹெலிகாப்டர் ஆகியவை மூலம் மீனவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 3 பேரின் உடல்கள் சடலமாக மீட்கப்பட்டு மங்களாபுரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டன. சடலமாக மீட்கப்பட்டவர்களில் குமரி மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்சாண்டர் (38) மற்றும் அவரது மாமனார் மாணிக்தாசன் (60) என்பதும், மற்றொருவர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்துள்ளது.

மாயமான 9 மீனவர்களில் 4 பேர் மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், 5 பேர் தமிழகத்தின் ராமநாதபுரம் மற்றும் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே உள்ள கன்னிராஜபுரம் கிராமத்தைச் சேர்ந்த மீனவர்களான பழனிவேல், வேதமாணிக்கம், பாலமுருகன் உள்ளிட்ட 3 பேரும் இந்த விபத்தில் மூழ்கி மாயமானது அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய சரக்குக் கப்பலை ஆழ்கடலிலேயே சிறைப்பிடித்துள்ள கடலோரக் காவல் படையினர், விமானம் மற்றும் ரோந்துப் படகுகள் மூலம் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மாயமான மீனவர்களை விரைந்து தேடிக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவ அமைப்புகளும், மாயமான மீனவர்களின் குடும்பத்தினரும் கோரிக்கை வைத்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x