மூச்சுவிட சிரமப்படும் 'ரிவால்டோ' யானை; சிகிச்சை அளிக்க வனத்துறை முன்வருமா? - இயற்கை ஆர்வலர்கள் கேள்வி

ரிவால்டோ யானை: கோப்புப் படம்.
ரிவால்டோ யானை: கோப்புப் படம்.
Updated on
1 min read

மசினகுடியில் மூச்சுவிட சிரமப்பட்டு வரும் 'ரிவால்டோ' யானைக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வன ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம் மசினகுடி, வாழைத் தோட்டம் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக சுற்றிவரும் 'ரிவால்டோ' யானைக்குத் தும்பிக்கையில் காயம் ஏற்பட்டு நுனிப்பகுதி துண்டானது. இதனால் சரியாக உணவு உட்கொள்ள முடியாமலும், மூச்சுவிட முடியாமலும் யானை சிரமப்பட்டு வருகிறது. இரை தேட சிரமமாக இருப்பதால், 'ரிவால்டோ' எளிதில் உணவு கிடைக்கும் குடியிருப்புப் பகுதிகளில் வலம் வரத் தொடங்கியது. யானையின் நிலையைக் கண்டு பரிதாபப்பட்டு மக்கள் தொடர்ந்து உணவு வழங்கி வருகின்றனர்.

இதனால், யானையை சிகிச்சைக்காக முதுமலைக்கு அழைத்துச் செல்ல வனத்துறையினர் முடிவு செய்து, வாழைத் தோட்டத்திலிருந்து வன ஊழியர்களின் உதவியுடன் பழங்கள் கொடுத்து அழைத்துச் சென்றனர். மூன்று நாட்களாக இரவு, பகலாக கவனமாக யானையை அழைத்துச் சென்றபோது, திடீரென யானை வனத்துறையினரின் கட்டுப்பாட்டிலிருந்து தப்பியது. இதனால், வனத்துறையினரின் முயற்சி தோல்வியடைந்தது.

இதனையடுத்து, வனத்துறையினர் வாழைத் தோட்டம் பகுதியில் மரக்கூண்டு அமைத்து யானைக்கு சிகிச்சையளிக்க ஏற்பாடுகளைச் செய்தனர்.

இந்நிலையில், 'ரிவால்டோ'வை முகாமுக்குக் கொண்டுசெல்லக் கூடாது என, வழக்குத் தொடரப்பட்டு, நீதிமன்ற வழிகாட்டுதலால், 'ரிவால்டோ'வை கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்கும் வனத்துறையினரின் முயற்சி கைவிடப்பட்டது. இதனால், 'ரிவால்டோ' மீண்டும் வாழைத்தோட்டம், மசினகுடி குடியிருப்புப் பகுதிகளிலேயே வலம் வருகிறது.

இந்நிலையில், யானை சிரமப்பட்டு வருவதால், அதற்கு உடனடியாக சிகிச்சை அளிக்க வனத்துறை முன்வர வேண்டும் என, இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மசினகுடியைச் சேர்ந்த வன ஆர்வலர் ஆபித் கூறுகையில், "ரிவால்டோ யானை உணவு உட்கொள்ளவும், மூச்சு விடவும் மிகவும் சிரமப்படுகிறது. இதனால், வனத்துறையினர் உடனடியாக அதற்கு சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றார்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், "நீதிமன்றம் 'ரிவால்டோ'வைப் பிடிக்கக் கூடாது என வழிகாட்டுதல் வழங்கியுள்ள நிலையில், அதைப் பிடித்து கூண்டில் அடைத்து சிகிச்சை அளிக்க முடியாது. இருப்பினும், யானையைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். அதற்கு பழங்கள் மூலம் மருந்துகளை வழங்கி வருகிறாம்" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in