

திமுக பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை வேகமாகப் பரவி வருகிறது. கடந்த மார்ச் மாத ஆரம்பத்தில் மிகக் குறைவாக இருந்த கரோனா தொற்று எண்ணிக்கை திடீரென இரண்டாவது பரவல் காரணமாக வேகமாக உயர்ந்து வருகிறது. கடந்த மார்ச் மாதத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தலைவர்களுக்கும் தொற்று ஏற்பட்டது.
பிரச்சாரத்தின்போதே பல வேட்பாளர்கள் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். மக்களவை திமுக குழு துணைத் தலைவர் கனிமொழி பிரச்சாரம் முடிந்த அன்றே கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பாஜக துணைத் தலைவர் அண்ணாமலை கரோனாவால் பாதிக்கப்பட்டார். திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் திமுகவின் பொருளாளரும், மக்களவை திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலுவுக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து அவரது மகனும், திமுக எம்எல்ஏவுமான டி.ஆர்.பி.ராஜா தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவரது ட்விட்டர் பதிவு:
“எனது தந்தையார் டி.ஆர்.பாலுவுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளது.
கடந்த ஒரு வாரமாக அவரைச் சந்தித்தவர்கள் தயவுகூர்ந்து கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்”.
இவ்வாறு டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.