Published : 14 Apr 2021 02:48 PM
Last Updated : 14 Apr 2021 02:48 PM

அனைத்து நாட்களும் நல்ல நாட்களே: விடுமுறை நாளில் பத்திரப் பதிவுக் கட்டணம் கூடுதல் வசூலா?- முத்தரசன் கண்டனம்

சென்னை

தமிழகத்தில் அரசு விடுமுறை நாட்களிலும், குறிப்பாக சித்திரை 1, ஆடி 18, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்றும், இந்நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணத்திற்கு கூடுதல் பதிவுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்ற அரசின் உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:

“விடுமுறை நாட்களிலும், குறிப்பாக சித்திரை 1, ஆடி 18, தைப்பூசம் ஆகிய நாட்களில் பத்திரப் பதிவு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என்றும், இந்நாட்களில் பதிவு செய்யப்படும் ஆவணத்திற்கு கூடுதல் பதிவுக் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்றும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நாட்கள் ‘நல்ல நாட்கள்’ என்பது ‘நம்பிக்கையே’ தவிர இதற்கு அறிவியல் ஆதாரங்கள் ஏதுமில்லை. மற்ற நாட்கள் கெட்ட நாட்களும் அல்ல. பகுத்தறிவுக்கு ஆதரவாகத் தனது வாழ்நாள் முழுவதும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய பெரியார் வழி நடப்பதாகக் கூறிக் கொள்ளும் அதிமுக முற்றிலும் காவி மயத்தில் கலந்து போனதற்கு அரசின் உத்தரவு ஆவண சாட்சியாகும்.

இது மக்களிடம் மூட நம்பிக்கையை மேலும் ஊக்கமூட்டி வளர்க்கும் செயலில் அரசு நிர்வாகம் ஈடுபடுவதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயற்குழு வன்மையாகக் கண்டிப்பதுடன், விடுமுறை நாட்களில் கூடுதல் பதிவுக் கட்டணம் வசூலித்து, அலுவலகம் செயல்பட வேண்டும் என்ற உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x