

அம்பேத்கர் பிறந்த நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவரை நினைவுகூர்ந்துள்ளார்.
'சட்ட மேதை' அம்பேத்கர் 1891-ம் ஆண்டு ஏப்ரல் 14-ம் தேதி பிறந்தார். சடட் வல்லுநராக, பொருளாதார நிபுணராக, அரசியல் மேதையாக தன்னை நிரூபித்தார். 1990-ல் அவருக்கு 'பாரத ரத்னா' விருது வழங்கப்பட்டது.
அம்பேத்கரின் 130-வது பிறந்த நாள் இன்று இந்தியா முழுவதும் கொண்டாடப்படுகிறது. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், இயக்கங்களும் அம்பேத்கர் சிலைகளுக்கு ஆங்காங்கே மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் அம்பேத்கரின் சமூகப் பங்களிப்பை நினைவூட்டி வருகின்றனர்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இந்நிலையில், அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் இன்று (ஏப். 14) தன் ட்விட்டர் பக்கத்தில், "அரசியல் சாசனம் நல்லதாக இருந்தாலும் அமல்படுத்துபவர்கள் நல்லவர்கள் இல்லையெனில் சட்டங்களும் மோசமாகிவிடும்என்று தீர்க்கதரிசனத்தோடு சொன்ன சட்டமேதை பாபா சாகேப் அம்பேத்கரின் பிறந்த தினம் இன்று. அமல்படுத்துபவர்களை நோக்கிக் குரலெழுப்புவோம்" எனப் பதிவிட்டுள்ளார்.