Published : 14 Apr 2021 01:29 PM
Last Updated : 14 Apr 2021 01:29 PM

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கா?- சுகாதாரத் துறைச் செயலாளர் பதில்

சென்னை

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் பதிலளித்துள்ளார்.

சென்னை, போரூரில் சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் இன்று தடுப்பூசி திருவிழாவைத் தொடங்கிவைத்த பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''தற்போது பிற மாநிலங்களைப் போல தமிழகத்தில் முழு ஊரடங்கு அறிவிக்கப்படும் சூழல் இல்லை. ஆனால், அதே நேரத்தில் இது கொள்கை ரீதியான முடிவு. எங்கள் அளவில் (சுகாதாரத் துறை) எந்த முடிவும் முடிவெடுக்க முடியாது. முதல்வருடன் கலந்து ஆலோசிக்காமல் நான் எதுவும் சொல்ல முடியாது.

மகாராஷ்டிராவில் தினந்தோறும் சுமார் 60,000 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். மொத்தமாகத் தற்போது 5.93 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனால் ஊரடங்கு முடிவை அந்த மாநிலம் எடுத்துள்ளது.

ஏற்கெனவே தமிழகத்தில் வணிகம், விற்பனை, திருமணம், இறப்பு, கூட்டங்கள் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த நேரத்தில் பொதுமக்களுக்கு வைக்கும் வேண்டுகோள் என்னவென்றால் நோய் கட்டுப்பாட்டுப் பகுதிகளில், அந்தந்த தெரு, அந்தந்த வீடுகளில் கட்டுப்பாட்டு விதிகளைக் கறாராகக் கடைப்பிடியுங்கள். கூட்டத்தைத் தவிருங்கள்.

வீட்டிலிருந்து பணி செய்ய வாய்ப்புள்ளவர்கள் அனைவரும் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும். நோய் பரவும் சூழலில் அனைத்து நிறுவனங்களும் இதைக் கடைப்பிடிக்க வேண்டும். இதுவரை தொழிற்சாலைகள், வேளாண்மை ஆகிய துறைகள் சார்ந்து எந்தவொரு நோய்ப் பரவலும் ஏற்படவில்லை. அதே நேரத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் தீவிர நோய்ப் பரவல் ஏற்பட்டது. அதேபோல சந்தைகள் போன்ற கூட்டங்களில் நோய்ப் பரவல் ஏற்பட்டதால் இவற்றில் தனி கவனம் செலுத்துமாறு கூறியுள்ளோம்.

தடுப்பூசி போடுவோர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, குடியிருப்பு நல மையங்களின் நிர்வாகிகளை அழைத்து அவர்களிடமும் தடுப்பூசி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தத் திட்டமிட்டுள்ளோம்''.

இவ்வாறு ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x