

கோவையில் வாக்கு எண்ணிக்கை மையத்துக்கு கண்டெய்னர் வடிவிலான 2 நடமாடும் கழிவறை வாகனங்கள் கொண்டு வரப்பட்டதற்கு, திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடத்தப்பட்டது. கோவை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தேர்தலுக்காக 4,427 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன. வாக்குப்பதிவு முடிந்தவுடன் 6,885 பேலட் யூனிட் இயந்திரங்கள், 5,316 கன்ட்ரோல் யூனிட் இயந்திரங்கள், 5,894 வாக்குப்பதிவு சரிபார்ப்பு இயந்திரங்கள், தடாகம் சாலையில் உள்ள வாக்கு எண்ணிக்கை மையமான அரசினர் தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டன.
அங்கு தொகுதிகள் வாரியாக ஏற்படுத்தி வைக்கப்பட்டு இருந்த காப்பு அறைகளில், அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்பட்டு, அந்த அறைகளின் முன்பு துணை ராணுவத்தினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அதேபோல், வாக்கு எண்ணிக்கை மையத்தில், வேட்பாளர்களின் முகவர்களும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், வளாகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர்ந்து, மெகா திரை மூலம் சிசிடிவி கேமராவில் பதிவாகும் காட்சிகளைக் கண்காணித்து வருகின்றனர்.
2 வாகனங்கள்
இந்நிலையில், நேற்று (ஏப். 13) இரவு 2 கண்டெய்னர் லாரிகள் வாக்கு எண்ணிக்கை மையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. இதைப் பார்த்த முகவர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்குத் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, திமுக வேட்பாளர்கள் நா.கார்த்திக், குறிச்சி பிரபாகரன், வ.ம.சண்முகசுந்தரம், காங்கிரஸ் வேட்பாளர் மயூரா எஸ்.ஜெயக்குமார், இ.கம்யூ வேட்பாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர், அங்கு நேற்று இரவு வந்தனர். அதேபோல், திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்களும் அங்கு குவிந்தனர். இதையடுத்து போலீஸார் அங்கு குவிக்கப்பட்டனர்.
தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், வந்த 2 கண்டெய்னர் லாரிகளும், நடமாடும் கழிவறை வாகனங்கள் எனத் தெரிந்தன. வளாகத்துக்குள் கழிவறை வசதி முன்னரே உள்ளது. அப்படியிருக்கையில், ஏன் நடமாடும் கழிவறை வாகனங்கள் கொண்டு வரப்பட்டன? என திமுக வேட்பாளர்கள் அங்கிருந்த அதிகாரிகளிடம் கேள்வி எழுப்பினர்.
மேலும், அந்த வாகனத்தை முழுமையாக சோதனை செய்தனர். திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து 2 வாகனங்களும் அங்கிருந்து வெளியே அனுப்பப்பட்டன. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் நேற்று இரவு பரபரப்பு ஏற்பட்டது.