

சென்னை மாநகர காவல்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
டிசம்பர் 31-ம் தேதி (இன்று) இரவு நடைபெறவுள்ள புத்தாண்டு கொண்டாட்டங்களை ஒட்டி சென்னை மாநகரில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள், உணவு விடுதிகள் மற்றும் கேளிக்கை விடுதிகள் பின்வரும் விதிமுறைகளை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றன.
அனுமதி கோரி விண்ணப்பிப் பவர்களுக்கு இன்று மாலை 6 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை கொண்டாட்டங்களுக்கான சிறப்பு உரிமம் வழங்கப்படும். நட்சத்திர ஓட்டல்கள், கேளிக்கை விடுதிகளில் உணவு வழங்குதல், மதுபான விற்பனை உள்ளிட்ட கொண்டாட்டங்களை நள்ளிரவு 1 மணியுடன் கண்டிப்பாக முடித்துக் கொள்ள வேண்டும். அனைத்து வாகனங்களும் முறையாக சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து நுழைவு வாயில்களிலும் கண் காணிப்பு கேமரா பொருத்தப் பட்டு வாகனங்களின் விவரங்கள் பதிவு செய்யப்பட வேண்டும். நீச்சல் குளத்தின் மீதோ அருகிலோ தற்காலிக மேடைகளை அமைக்கக் கூடாது.
கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்த அமைக்கப்படும் தற்காலிக மேடையின் ஸ்திரத்தன்மையை உறுதிசெய்ய சம்பந்தப்பட்ட துறையிடமிருந்து தகுதிச் சான்றிதழ் பெற வேண்டும். நீச்சல் குளங்களை இன்று மாலை 6 மணி முதல் 1-ம் தேதி காலை 6 மணி வரை மூடி வைத்திருக்க வேண்டும்.
நீச்சல் குளத்துக்குச் செல்லும் வழிகள் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு தடைகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.
மது அருந்திவிட்டு வெளியே வரும் விருந்தினர்களை மாற்று வாகனம் மூலம் அனுப்பி வைக்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்ய வேண்டும். கேளிக்கை நிகழ்ச்சிகளை மிகுந்த நாகரிகத்துடனும், கண்ணியத் துடனும் நடத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிர்வாகத்தினர் மேற்கொள்ள வேண்டும்.
விதிமுறைகளை மீறும் விடுதி நிர்வாகத்தினர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கும் வகையில், கொண்டாட்டத்தில் ஈடுபடுவோர் எல்லையை மீறக் கூடாது.
இரு சக்கர வாகனங்களில் அதிகவேகமாக செல்லவும், 2 பேருக்கு மேல் அமர்ந்து செல்லவும் தடை விதிக்கப்படுகிறது. புத்தாண்டு வாழ்த்து கூறுகிறோம் என்ற பெயரில் பெண்களை கேலி செய்வது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது. விரும்பத்தகாத முறையில் கேலி மற்றும் கிண்டலில் ஈடு படுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பிறர் மீது வர்ணப் பொடிகளை வீசக்கூடாது. வர்ணம் கலந்த தண்ணீரை பீய்ச்சி அடிக்கக் கூடாது.
புத்தாண்டை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாட மேற்கண்ட வழிகாட்டுதல்களை பின்பற்றி காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சென்னை மாநகரில் விரிவான பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.