உணவகத்தில் தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

உணவகத்தில் தாக்குதல் நடத்திய உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்
Updated on
1 min read

கோவை காந்திபுரம் மத்திய பேருந்து நிலைய வளாகத்தில், சாஸ்திரி சாலையைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உணவகம் நடத்தி வருகிறார். கடந்த 11-ம் தேதி இரவு 10.15 மணிக்கு உணவகத்தில் நுழைந்த, காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து, அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த பெண்கள், பணியாற்றிக் கொண்டிருந்த ஊழியர்களை லத்தியால் தாக்கினார்.

இதில், வாடிக்கையாளரான ஒசூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி, கதிர்வேல், ஆறுமுகம், சதீஷ்குமார் உள்ளிட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக, உணவக உரிமையாளர் மோகன்ராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகர காவல்ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரிடம் புகார் அளித்தார். இந்த சர்ச்சையைத் தொடர்ந்து, உதவி ஆய்வாளர் முத்துவை உடனடியாக ஆயுதப் படைக்கு மாற்றி, காவல் ஆணையர் உத்தரவிட்டார்.

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடத்திஉடனடியாக அறிக்கை சமர்ப்பிக்க, மத்தியஉட்கோட்ட சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் பிரேமானந்தனுக்கு, காவல் ஆணையர் உத்தரவிட்டார். உதவி ஆணையர் விசாரணை நடத்தி வருகிறார். இதற்கிடையே தாக்குதலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் முத்துவை பணியிடை நீக்கம்செய்து, நேற்று முன்தினம் இரவு, காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in