Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கு மதிப்பெண் அடிப்படையில் பட்டியல் தயாரிக்க உத்தரவு: தமிழக அரசின் மறுசீராய்வு மனு தள்ளுபடி

டிஎன்பிஎஸ்சி மற்றும் டிஆர்பி போன்ற தேர்வு முகமைகள் மூலம் போட்டித் தேர்வின் அடிப்படையில் நேரடியாக நியமிக்கப்பட்ட அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் தயாரிப்புக்கு இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி அடிப்படையிலான உள்ஒதுக்கீடு முறையை தமிழக அரசு கடந்த 2003 ஆண்டு முதல் பின்பற்றி வருகிறது. இதை எதிர்த்து, டிஎன்பிஎஸ்சி தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று ரேங்க் பட்டியலில் முன்னிலை வகிக்கும் அரசு ஊழியர்கள் பலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், கடந்த 2015-ம் ஆண்டு தமிழ்நாடு மாநில சார்நிலைப் பணி விதிகளின்படி மதிப்பெண் அடிப்படையில் முதுநிலைப் பட்டியல் தயாரித்து அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தர வேண்டும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த 2016-ல் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில் தமிழக அரசு கடந்த 2016-ம் ஆண்டு சட்டம் இயற்றி, அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கும் இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு முறைகளை பின்பற்றலாம் என விதிகளில் மாற்றம் கொண்டு வந்தது.

இதை எதிர்த்து அரசு ஊழியர்கள் பலர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ‘‘அரசு ஊழியர்களின் பதவி உயர்வுக்கான முதுநிலைப் பட்டியல் என்பது அவர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில்தான் இருக்க வேண்டுமேயன்றி, இடஒதுக்கீடு மற்றும் இனசுழற்சி உள்ஒதுக்கீடு அடிப்படையில் இருக்கக்கூடாது’’ என 2019-ல் தீர்ப்பளித்தனர்.

இதை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவையும் உச்ச நீதிமன்றம் கடந்தாண்டு தள்ளுபடி செய்தது.

சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை தமிழக அரசு அமல்படுத்தவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட அரசு ஊழியர்கள் உச்ச நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை தமிழக அரசு 4 வாரங்களில் அமல்படுத்த வேண்டும், இல்லையெனில் தலைமைச் செயலர், டிஎன்பிஎஸ்சி செயலர் ஆஜராக உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மறுசீராய்வு செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், ஆர்.எம்.டி.டீக்காராமன் ஆகியோர், அரசின் மறுசீராய்வு மனுவை தள்ளுபடி செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x