

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே உள்ள பகுதியைச் சேர்ந்த கூலி வேலை செய்து வரும் தம்பதிக்கு 3 மகள்கள், 1 மகன் உள்ளனர். 2 மகள்களுக்கு திருமணம் நடந்துவிட்டது. இதில் 14வயதான 3-வது மகள் தனதுசகோதரி வீட்டில் வசித்து வந்துள்ளார். அவரை அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மிரட்டி பாலியல்வன்கொடுமை செய்து வந்துள்ளனர்.
இதுதொடர்பாக சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அவர்கள், மாவட்ட குழந்தைகள் நல அலுவலரிடம் கடந்த பிப்.19-ம் தேதி புகார் செய்துள்ளனர். புகாரின்பேரில் விசாரணை நடத்திய மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் ரஞ்சிதப்பிரியா, திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் செய்தார்.
இதன்பேரில் 12 பேர் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். இதில், சிறுமியின் சகோதரியின் கணவர் சின்ராஜ் மற்றும் வடிவேல், சுந்தரம், கண்ணன், பன்னீர், மூர்த்தி, அபி,கோபி, சேகர், சங்கர், சரவணன்ஆகிய 11 பேரை திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையபோலீஸார் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள குமாரபாளையத்தைச் சேர்ந்த குமார் என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
இதனிடையே கைதான நபர்களின் குடும்பத்தினர் அவர்களைவிடுவிக்கக் கோரி திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல் நிலையம் எதிரில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.