Published : 14 Apr 2021 03:13 AM
Last Updated : 14 Apr 2021 03:13 AM

கரோனா இரண்டாம் அலையால் மீண்டும் ஊரடங்கு பதற்றம்; திருப்பூரில் பணிபுரியும் வடமாநிலத் தொழிலாளர்கள் அச்சம்: வேலை செய்வதா, சொந்த ஊர் செல்வதா என்பதில் தொடரும் குழப்பம்

கரோனா இரண்டாம் அலைதமிழகத்தில் தீவிரமாக பரவி வரும்நிலையில், வேலைக்காக வந்து தங்கியுள்ள வட மாநிலத் தொழிலாளர்கள் திருப்பூரில் தொடர்ந்து தங்குவதா அல்லது சொந்த ஊர்களுக்கு செல்வதா என்ற குழப்பமான மனநிலையில் இருப்பதாகதெரிவித்துள்ளனர்.

திருப்பூரில் வாழும் 65 சதவீதம்பேர் நம்பி இருக்கும் தொழில் பின்னலாடை. இதில் பணிபுரிபவர்களில் மூன்றில் ஒரு பங்கு வகிப்பவர்கள் வடமாநிலத் தொழிலாளர்கள். இந்த எண்ணிக்கை ஒன்றரை லட்சம் தொடங்கி 2 லட்சத்துக்குள் அடங்கும் என்கின்றனர் தொழிற்சங்கத்தினர்.

கடந்த ஆண்டு கரோனா தொற்று ஏற்பட்டபோது அறிவிக்கப்பட்ட முழு ஊரடங்கால், வடமாநிலத் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மிகவும்சிரமப்பட்டனர். ஊரடங்கால் தொழில்பாதித்த அதேவேளையில், தொழிலாளர்கள் பற்றாக்குறையால் மீண்டும் தள்ளாடியது பின்ன லாடைத்துறை.

பிழைப்பு இருக்காது

இதுதொடர்பாக ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த மனோ ரஞ்சன்கூறும்போது, "முதல் முறை ஒரு பெருந்தொற்று என்பதால், அதீத பயம் இருந்தது. தற்போது தடுப்பூசிஉள்ளிட்டவை இருந்தாலும், அச்சத்தின் அளவு சற்று குறைந்துள்ளது. அதேசமயம், முழு ஊரடங்கு வந்துவிடும் என்கிற பீதியையும் தவிர்க்க முடியாததால், பலரும் வீடு திரும்புகின்றனர். 4 மாதங்களுக்கு முன்புதான் திருப்பூர் திரும்பினோம். அங்கு சென்றால் பிழைப்புக்கு வழி இருக்காது. இந்த நெருக்கடியான காலகட்டத்தை இங்கேயே கடப்பது என தீர்க்கமாக முடிவு எடுத்துவிட்டோம்" என்றார்.

கொல்கத்தாவை சேர்ந்த தீனுவந்து கூறும்போது, "கடந்த முறை உடனடியாக கட்டுப்பாடுகளைக் கொண்டுவந்ததால், வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகமாக பாதிப்புக்கு ஆளாகினர். பல இடங்களில் ஒருவேளை உணவு சாப்பிடவே பெரும் போராட்ட மாக இருந்தது. ஊருக்கு சென்றுவிட்டால், இங்கு செய்த வேலை மூலமாக சேமித்த சொற்பத் தொகையாவது குடும்பத்துக்கு மிஞ்சும்" என்றார்.

வறுமையிலிருந்து மீள..

மேலும் சிலர் கூறும்போது, "கடந்த முறை திடீரென அரசு அறிவித்த முழு ஊரடங்குதான், தொழிலாளர்களை அதிக பதற்றத்துக்கு ஆளாக்கியுள்ளது. விதிமுறைகளை கடைப்பிடித்து தடுப்பூசிகளை செலுத்தினாலும், முழு ஊரடங்கு வந்துவிட்டால் என்ன செய்வது? அடுத்து ஊருக்கு செல்வது பெரும்பாடாகிவிடும். அதேபோல, அங்கு சென்றால் வேலை இருக்காது.குடும்பங்களில் வறுமை சூழ்ந்துவிடும். வேறு வழியின்றி, குடும்ப பொருளாதாரத்தை மீட்டெடுக்க இங்கு தங்குகிறோம்" என்றனர்.

மத்திய அரசுக்கு ஏஇபிசி கடிதம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், ஜவுளித் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி,வர்த்தக அமைச்சர் பியூஸ்கோயல் ஆகியோருக்கு, ஏ.இ.பி.சி. தலைவர் ஏ.சக்திவேல் அனுப்பிய கடிதத்தில், "நாட்டின் முதுகெலும்பாக குறு, சிறு, நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. கிராமப்புற பகுதிகளைச் சேர்ந்த 1.30 கோடி தொழிலாளர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்று வருகின்றனர். கரோனா இரண்டாவது அலை வீசத் தொடங்கியுள்ள நிலையில், பரிசோதனை மற்றும் தடுப்பூசி போடும் பணிகளை அரசு வேகப்படுத்தியிருப்பது வரவேற்கத்தக்கது.

கரோனா பாதிப்புகளிலிருந்து ஆடை உற்பத்தி துறை, தற்போதுதான் மீண்டும் எழுச்சி பெறத் தொடங்கியுள்ளது. வெளிநாடுகளிலிருந்து இந்திய ஏற்றுமதி ஆடை உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆர்டர்வருகை அதிகரித்துள்ளது. மீண்டும்முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டால், ஆடை உற்பத்தி துறை கடும் வீழ்ச்சியை சந்திக்கும். ஏற்றுமதியாளர்கள் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்ற தயாராக உள்ளனர். ஆனால்பொதுமுடக்கத்தை தவிர்க்க விரும்புகிறார்கள். பெரும்பாலான தொழிலாளருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும்ஆயத்த ஆடை ஏற்றுமதி தொழிலை, அத்தியாவசிய சேவைதுறையாக அறிவிக்க வேண்டும். தொழில் நிறுவனங்கள் தொடர்ந்து தடையின்றி இயங்க அனுமதிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x