

காஞ்சிபுரம் அருகே வழக்கறிஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி நேற்றுமருத்துவமனை முன்பு சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
காஞ்சிபுரம் அருகே உள்ளகாரை கிராமத்தைச் சேர்ந்தவர்அழகரசன் (42). வழக்கறிஞராக உள்ளார். இவர் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் இரவு 4 பேர் கொண்ட கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக காரை கிராமத்தைச் சேர்ந்த வேலு, காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், தர் உட்பட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்த வழக்கில் உண்மைக் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை முன்பு விடுதலை சிறுத்தைகள், மக்கள் மன்றம், வழக்கறிஞர்கள் உட்பட பலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் போலீஸார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதிஅளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். அழகரசன் சடலம் உடற்கூறு ஆய்வுக்கு பின் அவர்களது குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. போலீஸார் கொலை வழக்கில் தொடர்புடைய 4 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.