

பண மதிப்பிழப்பு செய்யப்பட்டு 4 ஆண்டுகளாகியும் பழைய 1000, 500 ரூபாய் நோட்டுகள் இன்னும் ஒழியவில்லை. இதைப் பயன்படுத்தி தரகர்கள் சிலர் மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரதமர் மோடி 2016 நவ.8-ம் தேதி ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று திடீரென அறிவித்தார். ஆனால் அதற்கு பதிலாக புதிதாக ரூ.2,000, ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. தொடர்ந்து புதிதாக ரூ.200, ரூ.100, ரூ.50, ரூ.20, ரூ.10 நோட்டுகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் பலர் வங்கிகளில் வாரக் கணக்கில் காத்திருந்தனர்.
பாஜக அரசு இதை தங்களது சாதனையாக கூறினாலும், எதிர்க்கட்சிகள் இன்றும் விமர்சித்துக் கொண்டுதான் இருக்கின்றன. பண மதிப்பிழப்பு செய்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை தனிநபர் 10-க்கும் மேல் வைத்திருந்தால் கிரிமினல் குற்றமாக கருதப்படுவதுடன் மேலும் அபராதமும் விதிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது.
2 ஆண்டுகளுக்கு முன்பு, மதுரையில் ரூ.1 கோடி மதிப்பில் பழைய ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த 4 பேரை போலீஸார் பிடித்தனர். அதேபோல் நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருந்தவர்கள் சிக்கியதாக செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் காளையார்கோவிலில் ரூ.4.8 கோடி மதிப்பிலான பழைய 1,000 ரூபாய் நோட்டுகளை வைத்திருந்த ஒரு பெண் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும், அவர்களிடம் இருந்து பணத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். பண மதிப்பிழப்பு செய்து 4 ஆண்டுகள் கடந்த நிலையிலும், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாமல் வைத்திருப்போரிடம் தரகர்கள் 'சதுரங்க வேட்டை' திரைப்படம் போன்று ஏமாற்றி பணம் பறித்து வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.
இதுகுறித்து சிவகங்கை போலீஸார் கூறும்போது, “பண மதிப்பிழப்பு செய்தபோது, கணக்கில் வராத பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை சிலரால் மாற்ற முடியவில்லை. அவற்றை அழிக்க மனமில்லாத நபர்கள் இதுபோன்ற தரகர்களை நம்புகின்றனர்.
தரகர்களும் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றித் தருவதாக கூறி 30 முதல் 50 சதவீதம் வரை கமிஷனாக முன்கூட்டிய தற்போதுள்ள பணத்தை (மதிப்புள்ள பணம்) பெற்றுக் கொள்கின்றனர்.
ஆனால் சொன்னபடி பணத்தை மாற்றித் தருவதில்லை. பணத்தை கொடுத்தோரும் வெளியே சொல்ல முடியாததால் அப்படியே விட்டுவிடுகின்றனர். ஒருசில நேரங்களில் ரகசிய தகவல்களால் இதுபோன்று மாட்டிக் கொள்கின்றனர். காளையார்கோவிலில் சிக்கியுள்ள தரகர் அருள்சின்னப்பன் வேறு ஏதேனும் மோசடி செய்துள்ளாரா என்பது குறித்தும் விசாரிக்கிறோம் என்று கூறினார்.
பணத்தை விடிய விடிய எண்ணிய போலீஸ்
காளையார்கோவிலில் பிடிப் பட்ட ரூ.4.80 கோடி பழைய ரூ.1,000 நோட்டுகள் சரியாக உள்ளதா என்பதை அறிய, விடிய விடிய ரூபாய் நோட்டுகளை போலீஸார் எண்ணினர்.