

காவல்துறையினர், பொதுமக்களிடம் மென்மையான போக்கைக் கையாள வேண்டும் என கோவை மாநகர காவல்துறை ஆணையர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாநகர காவல்துறைக்கு உட்பட்ட காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து, கடந்த 11-ம் தேதி காந்திபுரத்தில் உள்ள உணவகத்தில் நுழைந்து வாடிக்கையாளர், ஊழியர்களை தாக்கினார். இச்சம்பவம் தொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்தினர், மாநகர காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
அதேபோல், குனியமுத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கணேஷ்குமார், கடந்த மார்ச் 29-ம் தேதி, ஆத்துப்பாலம் சாலையில் உள்ள ஒரு பேக்கிரியில் நுழைந்து காசாளரை சரமாரியாக தாக்கினார். இந்த சம்பவங்கள் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.
சம்பந்தப்பட்ட உதவி ஆய்வாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், அவர்களை கைது செய்ய வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்திய இந்த செயல்பாடுகள், பொதுமக்கள், வியாபாரிகள் தரப்பில் காவல்துறையினர் மீது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள், வியாபாரிகள் அச்சம்
பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்வது குறித்து காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கு தகுந்த பயிற்சி அளிக்க உயரதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும், இல்லையெனில் சாத்தான்குளத்தில் நடந்த இரட்டை படுகொலை சம்பவம் போல், அசம்பாவிதங்கள் நடந்து விட வாய்ப்புகள் உள்ளதாகவும் சமூக செயல்பாட்டாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, காவல்துறையினர் பொதுமக்களிடம் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும் என மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், காவல்துறை உதவி ஆய்வாளர்கள், ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும்
இதுதொடர்பாக மாநகர காவல்துறை அதிகாரிகள் சிலர் கூறும்போது,‘‘ கோவை மாநகர காவல்துறையில் பணியாற்றும் காவல்துறையினர், பொதுமக்களிடம் மென்மையான போக்கை கையாள வேண்டும். உரிய மரியாதையுடன் பொதுமக்களை நடத்த வேண்டும். பொதுமக்களை அநாகரீகமான வார்த்தைகளில் திட்டுவது, தாக்குவது போன்ற செயல்களை செய்யக் கூடாது. சாதாரண விதிமீறல்களுக்கு சட்டப்படி வழக்குப்பதிந்தே நடவடிக்கை எடுக்க வேண்டும். தன்னிச்சையான தாக்குதல்களில் ஈடுபடக் கூடாது என நேற்று மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாநகரில் உள்ள காவல்துறையினருக்கு கண்டிப்புடன் அறிவுறுத்தியுள்ளார்,’’ என்றனர்.