மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது

மதுரை சேதுபதி மேல்நிலைப் பள்ளியில் கோவிட் 19 இலவச தடுப்பூசி திருவிழா: ஏப்.,14, 15, 16 ஆகிய 3 நாட்கள் நடைபெறுகிறது
Updated on
1 min read

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் ஏப்ரல் 14, 15, 16 ஆகிய தேதிகளில் (3 நாட்கள்) கோவிட் 19 இலவச தடுப்பூசித் திருவிழா நடைபெறுகிறது.

மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் நேற்று பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபையின் தலைவர் பி.விவேகானந்தன், செயலாளர் கார்த்திகேயன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது: பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை சார்பில் மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருக்கல்யாணத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு திருக்கல்யாண விருந்து அளிக்கப்படுகிறது. கடந்த 27 ஆண்டாக திருக்கல்யாண விருந்து வழங்கி வருகிறோம்.

சுமார் ஒரு லட்சம் பேருக்குமேல் திருக்கல்யாண விருந்தில் பங்கேற்கின்றனர். கடந்தாண்டு கரோனா ஊரடங்கின்போது வாழ்வாதாரம் இழந்தவர்களுக்கு முதியோர்களுக்கு 28 நாட்கள் உணவு வழங்கினோம். தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக திருக்கல்யாண விருந்து நடத்த முடியவில்லை.

எனவே, கரோனா நோய்த்தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் பிரதமர் மோடி தடுப்பூசி திருவிழா நடத்த அறிவுறுத்தியிருக்கிறார். அதன்படி எங்களது பக்த சபை சார்பில் பிரதமர் வேண்டுகோளுக்கிணங்க கோவிட் 19 தடுப்பூசித் திருவிழா சேதுபதி மேல்நிலைப்பள்ளியில் ஏப்ரல் 14, 15, 16 ஆகிய தேதிகளில் 3 நாட்கள் நடைபெறுகிறது.

இதில் பொதுமக்களுக்கு இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும். இதில் 45 வயதிற்கும் மேற்பட்டோர் அனைவரும் வருகைதந்து இலவச தடுப்பூசி செலுத்திக்கொள்ளலாம்.

தடுப்பூசி திருவிழாவில் பங்கேற்கும் 45 வயதிற்கும் மேற்பட்டோர் ஆதார் அட்டை நகல் கொண்டு வர வேண்டும். சமூக இடைவெளியை பின்பற்றி முகக்கவசம் அணிந்து வர வேண்டும் என தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in