Last Updated : 13 Apr, 2021 06:31 PM

 

Published : 13 Apr 2021 06:31 PM
Last Updated : 13 Apr 2021 06:31 PM

ரெம்டெசிவர் தட்டுப்பாடு; தெலங்கானாவிலிருந்து எடுத்துவந்து புதுச்சேரிக்கு அளித்த ஆளுநர் தமிழிசை

தெலங்கானாவிலிருந்து 1000 ரெம்டெசிவர் மருந்தை புதுச்சேரிக்கு விமானத்தில் எடுத்துவந்து சுகாதாரத் துறையிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை இன்று மாலை அளித்தார்.

இந்தியாவில் கரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது கோவிட் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படும் ரெம்டெசிவர் ஊசியின் தேவையை திடீரென அதிகமாக்கியுள்ளது. வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.

தற்போது கோவிட் அதிகரிப்பு சூழலைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் கோவிட் நிலவரத்தில் முன்னேற்றம் ஏற்படும் வரை, ரெம்டெசிவர் ஊசி மற்றும் ரெம்டெசிவர் ஆக்டிவ் மருந்துப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. புதுச்சேரியில் இம்மருந்து தட்டுப்பாடு இருந்தது.

இந்நிலையில் தெலங்கானாவிலிருந்து விமானம் மூலம் புதுச்சேரிக்குத் துணைநிலை ஆளுநர் தமிழிசை வந்தார். தெலங்கானாவிலிருந்து தான் கொண்டு வந்த ரெம்டெசிவர் மருந்தை சுகாதாரத்துறைச் செயலர் டாக்டர் அருணிடம் அளித்தார்.

அதைத் தொடர்ந்து ஆளுநர் தமிழிசை கூறியதாவது:

”புதுச்சேரியில் கரோனா தடுப்பு உயர்நிலைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடந்தபோது, "ரெம்டெசிவர்" மருந்து முற்றிலுமாக புதுச்சேரியில் தீர்ந்துபோனது தெரிந்தது. பல இடங்களிலும் தேடியும் தட்டுப்பாடு இருந்தது. ஏற்கெனவே இது போன்ற சூழல் தமிழகத்தில் வந்தபோது ஹைதராபாத்தில் தயாராவதால் அப்போது உதவினோம்.

யுகாதியால் தெலங்கானா மக்கள் என்னை அழைத்தனர். அங்கு சென்று அவர்களுடன் யுகாதியைக் கொண்டாடினேன். ஹைதராபாத் நிறுவனத்திடம் தனிப்பட்ட முறையில் கோரினேன். அத்துடன் மத்திய சுகாதாரத்துறை மற்றும் தெலங்கானா சுகாதாரத் துறையிடம் பேசினேன். தெலங்கானா முதல்வரும் உதவினார். தற்போது 1000 ரெம்டெசிவர் மருந்து கிடைத்து கையோடு விமானத்தில் எடுத்து வந்தேன். ரெம்டெசிவர் மருந்தை கள்ளச் சந்தையில் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

புதுச்சேரியில் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. சுகாதாரத்துறை இதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். மக்களும் விழிப்புணர்வுடன் இருப்பது அவசியம். கரோனா தடுப்பூசி திருவிழாவுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. முன்பு 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. இன்னும் நான்கு நாட்களுக்கு இத்திருவிழாவை நீட்டித்துள்ளோம். தமிழ்ப் புத்தாண்டு தினத்திலும் சுகாதாரத் துறையினர் கரோனா தடுப்பூசி பணியில் ஈடுபட உள்ளனர். நாம் விழிப்புணர்வுடன் இருந்தால் லாக்டவுன் தேவையில்லை".

இவ்வாறு ஆளுநர் தமிழிசை குறிப்பிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x