Last Updated : 13 Apr, 2021 05:31 PM

 

Published : 13 Apr 2021 05:31 PM
Last Updated : 13 Apr 2021 05:31 PM

அரசு உத்தரவை மீறி திருச்சி காந்தி மார்க்கெட்டில் சில்லறை வியாபாரம்: வாயில்களைப் பூட்டிய மாநகராட்சி அலுவலர்கள்

திருச்சி

அரசின் உத்தரவை மீறி திருச்சி காந்தி மார்க்கெட்டில் நேற்று இரவு தொடங்கி இன்று காலை வரை சில்லறை வியாபாரம் நடைபெற்றதால், மார்க்கெட்டின் அனைத்து வாயில் கதவுகளையும் மாநகராட்சி அலுவலர்கள் பூட்டினர்.

திருச்சி மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 66-ல் இருந்து கடந்த 13 நாட்களில் 1,360 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் கரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்ததையடுத்து, தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் காய்கனி வணிக வளாகங்களில் சில்லறை வணிகத்துக்கு ஏப்.10-ம் தேதி முதல் தடை விதித்து கடந்த 8-ம் தேதி அரசு உத்தரவிட்டது.

இதைத் தொடர்ந்து, திருச்சி காந்தி மார்க்கெட்டில் ஏப்ரல் 11-ம் தேதி முதல் சில்லறை வணிகம் நடைபெறாது என்றும், சில்லறை வியாபாரிகளுக்கு ஜி கார்னர் மைதானத்தில் இடம் ஒதுக்கப்படும் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது. மேலும், கழிப்பிடம், குடிநீர், மின் விளக்கு ஆகிய வசதிகள் மாநகராட்சி நிர்வாகம் மூலம் அமைத்துத் தரப்பட்டன.

இதனிடையே, சரக்குகளை காந்தி மார்க்கெட்டில் இருந்து வாங்கிக்கொண்டு போய் ஜி கார்னரில் வைத்து வியாபாரம் செய்வதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக எடுத்துக் கூறி மொத்த வியாபாரத்தையும் ஜி கார்னர் மைதானத்துக்கு மாற்ற வேண்டும் என்று சில்லறை வியாபாரிகள் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு, மொத்த வியாபாரிகளிடம் இருவேறு கருத்துகள் வெளியாகி வந்தன.

இந்த நிலையில், நேற்றிரவு சில்லறை வியாபாரிகள் சிலர் ஜி கார்னரில் காத்திருந்த நிலையில், மொத்த வியாபாரிகள் யாரும் அங்கு செல்லவில்லை. இதேபோல், காய்கனிகள் வாங்க மளிகைக் கடையினரோ, சிறு மார்க்கெட் வியாபாரிகளோ, பொதுமக்களோ வரவில்லை. இதையடுத்து, ஜி கார்னரில் இருந்த சில்லறை வியாபாரிகளும் நள்ளிரவுக்கு மேல் காந்தி மார்க்கெட்டுக்குச் சென்று பார்த்தபோது, அங்கு சில்லறை வியாபாரம் நடைபெற்று வந்தது. இதையடுத்து, ஜி கார்னரில் இருந்து சென்றவர்களும் கடைகளைத் திறந்து வியாபாரத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்த மாநகராட்சி அலுவலர்கள், இன்று காலை 9 மணியளவில் காந்தி மார்க்கெட்டுக்குச் சென்று சில்லறை வியாபாரக் கடைகளை மூடிவிட்டு, அனைத்து நுழைவுவாயில் கதவுகளையும் பூட்டினர்.

இதுகுறித்து மாநகராட்சி அலுவலர்கள் கூறும்போது, “அரசின் உத்தரவின் பேரில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாகவே சில்லறை வியாபாரிகள் ஜி கார்னர் மைதானத்துக்கு அனுப்பப்படுகின்றனர். இதுவரை 900க்கும் அதிகமானோருக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது. இனி இங்கு அரசின் மறு உத்தரவு வரும் வரை சில்லறை வியாபாரம் இருக்காது" என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x