

கோவை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் அதிகரிப்பதைத் தொடர்ந்து, கள அளவிலான குழுக்களை அமைத்துக் கண்காணிக்க, அரசு முதன்மைச் செயலர் அறிவுறுத்தியுள்ளார்.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினமும் 500க்கும் மேற்பட்டோர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கரோனா பரவலைத் தடுக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகத்தினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் முழுப் பலன் அளிக்கவில்லை.
இந்நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் நேற்று (12-ம் தேதி) இரவு நடந்தது. இக்கூட்டத்துக்கு மாவட்டக் கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு முதன்மைச் செயலரான என்.முருகானந்தம் தலைமை வகித்தார். மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன் முன்னிலை வகித்தார்.
இந்தக் கூட்டத்தில் அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனைக் கூட்டத்துக்குப் பின்னர், அரசு முதன்மைச் செயலர் என்.முருகானந்தம் கூறியதாவது:
''மாவட்ட நிர்வாகம், கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க பல்வேறு தொடர் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டத்தில் தினமும் சராசரியாக 6 ஆயிரத்துக்கு மேல் ஆர்டி-பிசிஆர் பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. நோய் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மாவட்டத்தில் இதுவரை 9 லட்சத்து 80 ஆயிரத்து 903 பேருக்கு கரோனா வைரஸ் தொற்றுப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 63,903 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 58,860 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
பல்வேறு நோய் தொடர்பில் இருந்த 699 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போதைய சூழலில் கரோனாவால் பாதிக்கப்பட்ட 2,397 பேர் சிகிச்சையில் உள்ளனர். மாவட்டத்தில் இதுவரை 2,64,502 நபர்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்திடம் தற்போது 42,900 எண்ணிக்கையிலான தடுப்பூசிகள் இருப்பில் உள்ளன.
தொற்று அதிகரிப்பு
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, கண்காணித்து, கட்டுப்படுத்த, உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வருவாய்த்துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, உள்ளாட்சித்துறை ஆகிய துறைகள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றன. கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர், பாதிப்பு குறைவாகவே இருந்தது. ஆனால், தற்போது கரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை முறையாகப் பின்பற்றத் தவறுவதால் கரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
தற்போதைய சூழலில், மாவட்டத்தில் சராசரியாக 500 முதல் 600 பேர் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள், அலுவலகங்கள், உணவு விடுதிகளில் பணிபுரியும் பணியாளர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோரின் உடல் வெப்பநிலையைப் பரிசோதனை செய்ய வேண்டும். கிருமிநாசினி கொண்டு கைகளை அடிக்கடி சுத்தமாகக் கழுவ வேண்டும். முகக்கவசம் அணிய வேண்டும், தனிநபர் இடைவெளியை முறையாகக் கடைப்பிடிக்க வேண்டும்.
விதிகளை மீறினால் நடவடிக்கை
அரசின் விதிமுறைகளைப் பின்பற்றி தொழிற்சாலைகள் இயங்க வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர்கள், ஊழியர்கள் தடுப்பூசி போட தொழிற்சாலை நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும். அரசின் நோய் தடுப்பு விதிமுறைகளைப் பின்பற்றாத தொழிற்சாலைகள், நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மாநகராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் கரோனா தொற்றுப் பரவலைக் குறைக்க, கள அளவிலான குழுக்கள் அமைத்துக் கண்காணிக்க வேண்டும்.
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கிருந்து வெளியே வராத வகையில் காவல்துறை, சுகாதாரத்துறையினர் கண்காணிக்க வேண்டும். காய்ச்சல் முகாம்கள் தொடர்ந்து நடத்திடவும், வீடு வீடாகச் சென்று காய்ச்சல், சளி, இருமல் உள்ளவர்களை தினமும் கண்காணிக்க வேண்டும்.
தொற்று உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் தகுந்த பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும். 45 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கரோனா தடுப்பூசி போடுவதை உறுதி செய்ய வேண்டும்''.
இவ்வாறு அரசு முதன்மைச் செயலர் என்.முருகானந்தம் கூறினார்.
இக்கூட்டத்தில், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.