

பெண் எஸ்.பி.க்குப் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக, முதற்கட்ட விசாரணை அறிக்கையை தமிழக அரசிடம் விசாகா கமிட்டி வழங்கியது.
முதல்வரின் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பெண் எஸ்.பி. ஒருவருக்குப் பாலியல் தொல்லை தந்ததாக டிஜிபி அந்தஸ்தில் உள்ள காவல்துறை உயரதிகாரி மீது விழுப்புரம் சிபிசிஐடி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். புகார் கொடுக்கவிடாமல் தடுத்ததாக, எஸ்.பி. ஒருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பாக, சிபிசிஐடி காவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பணியிடத்தில் நடந்த பாலியல் தொல்லை தொடர்பாக விசாரிக்க தமிழக அரசின் திட்டம் மற்றும் வளர்ச்சித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஜெயஸ்ரீ ரகுநந்தன் தலைமையில் அமைக்கப்பட்ட விசாகா குழு, கடந்த மார்ச் 26-ம் தேதி விசாரணையைத் தொடங்கியது.
இந்நிலையில், 14 சாட்சிகளிடம் விசாகா குழு நடத்திய விசாரணையின் முதற்கட்ட அறிக்கையை அக்குழு தமிழக அரசிடம் இன்று (ஏப். 13) சமர்ப்பித்தது.