கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 5,773 பேருக்கு அபராதம்

சிதம்பரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, போலீஸார் கொண்ட குழுவினர் அபராதம் விதித்தனர்.
சிதம்பரத்தில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை, போலீஸார் கொண்ட குழுவினர் அபராதம் விதித்தனர்.
Updated on
1 min read

கடலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 5,733 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்றின் 2-வது அலை பரவி வருகிறது. இதனைத் தடுக்கும் வகையில், தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் மாவட்ட நிர்வாகம், கடலூர், சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, பண்ருட்டி, காட்டுமன்னார்கோவில், ஸ்ரீமுஷ்ணம், குறிஞ்சிப்பாடி உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள நகரப் பகுதிகள் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் தீவிரத் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது முகக்கவசம் அணிந்து வர வேண்டும், பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு முகக்கவசத்துடன் 50 சதவீதப் பயணிகள் மட்டும் தனிமனித இடைவெளியுடன் பயணம் செய்ய வேண்டும், திரையரங்குகளில் 50 சதவீதப் பொதுமக்கள் முகக்கவசத்துடன் தனிமனித இடைவெளியுடன் அனுமதிக்கப்பட வேண்டும், அவர்களுக்கு கிருமிநாசினி தரப்பட வேண்டும், மால், திருமண மண்டபம் உள்ளிட்டவற்றில் 50 சதவீதப் பொதுமக்கள் முகக்கவசத்துடன் இருக்கும்படியும், தனிமனித இடைவெளியுடன் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் மாவட்டத்தில் பின்பற்றப்பட்டு வருகின்றன.

காவல்துறை மற்றும் சுகாதாரத் துறையினர் பல்வேறு திருமண மண்டபம், மால், வணிக நிறுவனங்கள், திரையரங்குகள் உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், மாவட்டத்தில் கடந்த 9-ம் தேதி முதல் இன்று (ஏப்.13) வரை முகக்கவசம் அணியாத 5,733 பேருக்கும், தனிமனித இடைவெளியைப் பின்பற்றாத 145 பேருக்கும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக, ரூ.10 லட்சத்து 64 ஆயிரம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in