

ஓட்டுக்குக் காசு கொடுக்கும் வழக்கம் எச்.ராஜாவின் தேர்தல் வரலாற்றில் இதுவரை நடந்ததே இல்லை. ஆனால் இந்தமுறை, ராஜாவும் பெட்டியைத் திறந்துவிட்டார். காரைக்குடி தொகுதியில் பெரும்பாலான இடங்களில் ராஜாவின் 500 ரூபாய் கவரும் கடைசி நேரத்தில் சுற்றில் வந்தது. இவருக்கு நிகராக அமமுக வேட்பாளர் தேர்போகி பாண்டியும் 500 ரூபாய் நோட்டுகளை இறக்கினார். களத்தில் நிற்கும் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு கையில் இருப்பு குறைந்து போனதால் 300 ரூபாய் கொடுத்தார். இதில் வேதனை கலந்த வேடிக்கை என்னவென்றால்... மாங்குடியை ஜெயிக்க வைக்க திமுகவினர் மன்றாடிக் கொண்டிருக்க, காங்கிரஸுக்குள்ளேயே ஒரு கோஷ்டி மாங்குடியை வீழ்த்த அஞ்சாம் படை வேலை பார்த்தது தான். இம்முறை மாங்குடி ஜெயித்தால் கார்த்தி சிதம்பரத்தின் கை ஓங்கிவிடும் என கணக்குப் போட்ட இந்தப் படை, மடியில் பணத்தைக் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியது. இவர்களும் சில இடங்களில் ஓட்டுக்கு 500 ரூபாய் கொடுத்தார்கள். கொடுத்துவிட்டு என்ன சொன்னார்கள் தெரியுமா... “நீங்க யாருக்கு வேணும்னாலும் ஓட்டுப் போடுங்க. ஆனா, மாங்குடிக்கு மட்டும் போடாதீங்க!” இந்த லட்சணம் தெரிந்துதானே இவர்களுக்கு 25 சீட் ஒதுக்கவே யோசித்தது திமுக!
மேலும், இதுபோன்ற பரபரப்பும், சுவாரஸ்யமும், அரசியலும் நிறைந்த செய்திகளுக்குத் தொடர்ந்து https://www.hindutamil.in/kamadenu இணையதளத்தைப் பார்க்கலாம்