Published : 13 Apr 2021 01:34 PM
Last Updated : 13 Apr 2021 01:34 PM

கரோனா பரவல்; கோயம்பேடு சந்தையில் ஒற்றைப்படை எண் கொண்ட கடைகள் இயக்கம்

பிரதிநிதித்துவப் படம்.

சென்னை

கரோனா பரவலைக் கட்டுப்படுத்த சென்னை கோயம்பேடு சந்தையில் சுழற்சி முறையில் இன்று ஒற்றைப்படை எண் கொண்ட 900 கடைகள் செயல்படுகின்றன.

தமிழகத்தில் மார்ச் மாதத் தொடக்கத்திலிருந்து மீண்டும் கரோனா தொற்றுப் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று (ஏப்.12) மட்டும் தமிழகம் முழுவதும் 6,711 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 9 லட்சத்து 40 ஆயிரத்து 145 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் நேற்று 2,105 பேருக்குத் தொற்று ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், சென்னை, கோயம்பேடு சந்தையில் 1,800 சிறு மொத்த வியாபாரக் கடைகள் உள்ளன. கரோனா பரவலைக் கட்டுப்படுத்த கோயம்பேடு சந்தையில் கடந்த 10-ம் தேதி முதல் சிறு மொத்த வியாபாரக் கடைகளை மூட தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, கைகளைச் சுத்தம் செய்தல், உடல் வெப்பப் பரிசோதனை என, கரோனா வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி 50% கடைகளைத் திறக்க அனுமதிக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர். இதையடுத்து, சுழற்சி முறையில் 50 சதவீதக் கடைகளைத் திறப்பதென முடிவெடுக்கப்பட்டது. திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் இரட்டைப்படை எண் கொண்ட கடைகளும், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் ஒற்றைப்படை எண் கொண்ட கடைகளும் திறக்க அனுமதிக்கப்பட்டது.

அதன்படி, இன்று (ஏப்.13) ஒற்றைப்படை எண் கொண்ட 900 கடைகள் திறக்கப்பட்டன. இன்று தெலுங்கு வருடப் பிறப்பு, நாளை சித்திரைத் திருநாள் எனப் பண்டிகை நாட்களாக இருந்தாலும், சிறு மொத்த வியாபாரக் கடைகளில் வாங்குவதற்கு வியாபாரிகளும் பொதுமக்களும் வருவதில்லை எனவும், 20% வியாபாரம் கூட நடப்பதில்லை எனவும் அங்குள்ள வியாபாரிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x