பாலியல் பலாத்கார புகாரில் அலட்சியம்? - போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு

பாலியல் பலாத்கார புகாரில் அலட்சியம்? - போலீஸாரை கண்டித்து ஆர்ப்பாட்டம்: பாதிக்கப்பட்ட பெண்ணை தாக்கியதாகவும் குற்றச்சாட்டு
Updated on
1 min read

பாலியல் பலாத்காரம் செய்ததாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் மீது முறையான நடவடிக்கை எடுக்கவில்லை எனக்கூறி போலீஸாரை கண்டித்து பல் வேறு அமைப்புகள் சோத்துப் பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன.

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த மணமான பெண் ஒருவர் கடந்த 11-ம் தேதி சித்தாமூர் போலீஸில் புகார் அளித்தார். அதில் தன்னை 4 பேர் கொண்ட கும்பல் ஒன்று பாலியல் பலாத்கார செய்ததாகவும் பின்னர், அருகிலிருந்த ஏரியில் முழ்கடித்து கொலை செய்ய முயற்சித்ததாகவும் அப்போது பொதுமக்கள் வந்ததால், தண்ணீரிலேயே விட்டு தப்பி சென்றதாகவும் கூறியிருந்தார்.

இதுபற்றி மேல்மருவத்தூர் வட்டார காவல் ஆய்வாளர் ராமதாஸ் விசாரித்துள்ளார். இதில் சந்தேகத்தின்பேரில் சிலரை காவல் நிலையத்தில் வைத்து விசாரித்ததாகவும் பின்னர், சில மணி நேரத்தில் அவர்களை அனுப்பிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் புகார் கொடுத்த பெண்ணை, மேல்மருவத்தூர் காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் ஒருவர் தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த சமூக அமைப்புகள் இப்பிரச்சினையில் தலையிட்டதால் பெண் அளித்த புகாரை போலீஸார் வழக்கு பதிவு செய்ததாக கூறப்படுகிறது. புகார் அளித்தும் சம்மந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சோத்துப்பாக்கத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தின.

இதுகுறித்து, மாதர் சங்க மாவட்ட செயலாளர் பிரமிளா கூறும்போது, ‘புகாரின் மீது விசாரித்து குற்றவாளிகளை கைது செய்யாமல், அந்த பெண்ணையே போலீஸார் அடித்து மிரட்டிய செயல் கண்டிக்கத்தக்கது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கும் அவரது குடும்பத்துக்கும் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும்’ என்றார்.

இந்த புகார் குறித்து மதுராந்தகம் டிஎஸ்பி சிவசங்கரை தொடர்பு கொண்டு கேட்டபோது, மேல்மருவத்தூர் ஆய்வாளர் விசாரித்து வருகிறார். அவருக்குதான் முழுத்தகவல் தெரியும். தனக்கு எதுவும் தெரியாது என கூறினார்.

ஆய்வாளர் ராமதாஸிடம் கேட்டபோது, ‘புகார் அளித்த பெண், மருத்துவர்களிடமும் போலீஸாரிடமும் முரண்பட்ட தகவல் அளிக்கிறார். வாக்குமூலங்களை சிறிது நேரத்தில் மாற்றி கூறுகிறார். மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், புகார் அளித்த 7 மணி நேரத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்தப் பெண்ணை போலீஸார் யாரும் அடிக்கவில்லை’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in