Published : 13 Apr 2021 10:10 AM
Last Updated : 13 Apr 2021 10:10 AM

மம்தா பானர்ஜிக்கு தடை; நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும்: ஸ்டாலின்

ஸ்டாலின்: கோப்புப்படம்

சென்னை

அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்ய வேண்டும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது. இதில் முதல் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இன்னமும் 4 கட்டத் தேர்தல்கள் நடைபெற வேண்டும்.

இந்நிலையில், முஸ்லிம் வாக்குகளைப் பெற மத ரீதியாகப் பேசியதாகவும், மத்தியப் படைகளுக்கு எதிராக வெகுண்டெழுமாறு வாக்காளர்களை தூண்டியதாகவும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.

இதையடுத்து, தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக, அடுத்த 24 மணி நேரத்துக்கு பிரச்சாரத்தில் ஈடுபட மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜிக்கு தேர்தல் ஆணையம் நேற்று (ஏப். 12) தடை விதித்தது.

இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் முடிவு ஜனநாயக விரோதமானது, அரசியல் சாசனத்துக்கு அப்பாற்பட்டது என விமர்சித்து, ட்வீட் செய்துள்ள மம்தா பானர்ஜி, இன்று (ஏப். 13) 12 மணியளவில் காந்தி மூர்த்தி பகுதியில் தர்ணாவில் ஈடுபடப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஏப். 13) தன் ட்விட்டர் பக்கத்தில், "நமது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையென்பது நேர்மையான, நியாயமான தேர்தல்களில்தான் நிலைகொண்டுள்ளது.

ஆகவே, அனைத்துக் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்கும் சமமான வாய்ப்பினை தேர்தல் ஆணையம் உறுதிசெய்வதோடு, சார்பின்மை மற்றும் நடுநிலை கடைப்பிடிக்கப்படுவதையும் உறுதிசெய்திட வேண்டும்" என பதிவிட்டுள்ளார்.


தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x