Published : 13 Apr 2021 03:11 AM
Last Updated : 13 Apr 2021 03:11 AM

சென்னையில் குறைந்த பெண்களின் வாக்குகள்; கட்சிகளின் செயல்பாடுகள் பெண்களைக் கவரவில்லை: முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் கருத்து

சென்னை

சென்னையில் கடந்த தேர்தலைவிட 50 ஆயிரம் பெண் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். இருப்பினும், கடந்த தேர்தலில் பதிவானதைவிட இந்த தேர்தலில் 5 ஆயிரம் வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன. அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் பெண்களைக் கவரவில்லை என்பதையே இது காட்டுகிறது என முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயர் தெரிவித்துள்ளார்.

அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளும் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கைகளில் பெண்களைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தன. இந்த தேர்தலில் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், பெண் வாக்காளர்களைக் கவர,உலக மகளிர் தினத்தன்றே இரு கட்சிகளும்போட்டி போட்டுக்கொண்டு, தேர்தல் அறிக்கையில் இடம்பெற இருந்த வாக்குறுதிகளை முன்கூட்டியே அறிவித்தன. சமையல் காஸ்சிலிண்டருக்கு ரூ.100 மானியம் என திமுகஅறிவித்த நிலையில், ஆண்டுக்கு 6 சிலிண்டர்இலவசம் என்று அதிமுக அறிவித்தது.

கட்சிகளின் அறிவிப்பு போருக்கு நடுவே ஏப்.6-ம் தேதி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்குப்பதிவு 72.81 சதவீதமாக இருந்தது. இதில் பெண்களின் வாக்குகள் 2 கோடியே 31 லட்சத்து 71 ஆயிரத்து736 (50.61 சதவீதம்). கடந்த 2016 தேர்தலுடன்ஒப்பிடும்போது, மாநில அளவில் பெண்களின் வாக்குகள் 15 லட்சத்து 42 ஆயிரத்து 929 அதிகமாக பதிவாகியுள்ளது. கடந்த தேர்தலை விட தஞ்சாவூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 606, கோவை மாவட்டத்தில் 1 லட்சத்து 3 ஆயிரத்து 114, கரூர் மாவட்டத்தில் 1 லட்சத்து 17 ஆயிரத்து 371 எனபெண்களின் வாக்குகள் கூடுதலாகப் பதிவாகியுள்ளன.

இதற்கு நேர்மாறாக சென்னை மாவட்டத்தில் கடந்த தேர்தலை விட பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை உயர்ந்தாலும், பதிவான வாக்குகள் இந்தத் தேர்தலில் குறைந்தன. 2016 தேர்தலில் 20 லட்சத்து 7 ஆயிரத்து 198 பெண் வாக்காளர்கள் இருந்தனர். 11 லட்சத்து 95 ஆயிரத்து 237 வாக்குகள்பதிவாகி இருந்தன. 2021 தேர்தலில் 20 லட்சத்து 61 ஆயிரத்து 473 பெண் வாக்காளர்கள் இருந்தனர். ஆனால் 11 லட்சத்து 89 ஆயிரத்து 794 பெண்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். கடந்த தேர்தலுடன் ஒப்பிடும்போது, இந்த தேர்தலில் 54,275 பெண் வாக்காளர்கள் அதிகரித்துள்ளனர். அப்படி இருந்தும் கடந்த தேர்தலிலை விட 5,443 வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன.

தாங்கள் வாக்களிக்காதது குறித்துசென்னை வியாசர்பாடி, தண்டையார்பேட்டை, திருவல்லிக்கேணி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் கூறியதாவது:

இதற்கு முன்பு தேர்தல் காலத்தில் கட்சியினர் மத்தியில் வாக்காளருக்கென்று ஒருமரியாதை இருந்தது. இந்த முறை எங்களையாரும் மதிக்கவில்லை. வீடு கட்ட தெருக்களில் ஜல்லி, மணல் கொட்டினாலோ, கழிவுநீர் குழாய் அடைப்பைச் சரி செய்ய சாலையை தோண்டினாலோ கட்சி வேறுபாடின்றி பணம்கேட்க வந்துவிடுகின்றனர். பணம் கொடுக்காவிட்டால் வேலை நடக்க விடமாட்டார்கள். இத்தகைய அரசியல்வாதிகளால் தேர்தலின்போது எங்களை நேருக்கு நேர் எதிர்கொள்ள முடியாமல் வீடு வீடாக வாக்கு கேட்க வரவே இல்லை. எங்கள் மீது அக்கறை இல்லாதவர்களின் வெற்றிக்காக நாங்கள் சிரமப்பட விரும்பவில்லை. அதனால் வாக்களிக்கச் செல்லவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினார்.

சென்னையில் பெண்கள் வாக்களிப்பது குறைந்திருப்பது தொடர்பாக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சாந்தஷீலா நாயரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

இந்த தேர்தலில் வேட்பாளர்கள் மக்களை நாடி வரவில்லை. வாக்காளர் சீட்டு வழங்கவும் வாக்காளர்களின் வீடுகளுக்கு அதிகாரிகள் வரவில்லை. 30 சதவீத வாக்குச்சாவடிகள் அதிகரித்த நிலையில், செயலி, தொலைபேசி வழியாகவும், பிறரைக் கேட்டும் வாக்குச்சாவடியைத் தேடி பிடித்து செல்ல பெண் வாக்காளர்கள் விரும்பாதது, கரோனா அச்சம் மற்றும் வெயில் போன்றவற்றால் வாக்களிப்பதை தவிர்த்து இருக்கலாம்.

பெண்கள் வாக்குப்பதிவு குறைந்திருப்பதைப் பார்க்கும்போது அரசியல் கட்சிகளின் செயல்பாடுகள் அவர்களைக் கவரவில்லை என்பதையே காட்டுகிறது. இந்த ஆட்சியே நீடிக்க வேண்டும் அல்லது ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் அவர்கள் மனதில் ஏற்படாமல் இருந்திருக்கலாம். மேலும், யார் ஆட்சிக்கு வந்தால் நமக்கென்ன என்ற அலட்சியம், சமூக மேம்பாட்டில் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளாமல் விலகி இருப்பது போன்றவையும் காரணமாக இருக்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x