Published : 13 Apr 2021 03:11 AM
Last Updated : 13 Apr 2021 03:11 AM

மக்கள் வாழ்வில் செழிப்பையும், மகிழ்ச்சியையும் உருவாக்கட்டும்: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் யுகாதி திருநாள் வாழ்த்து

சென்னை

யுகாதி திருநாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள தெலுங்கு, கன்னட மொழிபேசும் மக்களுக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் பழனிசாமி மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கைகளில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: தமிழகத்தில் உள்ள தெலுங்கு,கன்னடம், மராத்தி, சிந்தி பேசும் மக்களுக்கு எனது இதயம்கனிந்த யுகாதி புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தபுத்தாண்டு நம் வாழ்வில் செழிப்பையும் மகிழ்ச்சியையும் தரட்டும்.இந்த மகிழ்ச்சியான தருணத்தில்கலாச்சாரம், பாரம்பரியத்தை மேம்படுத்துவதற்கும், வளமான இந்தியாவை உருவாக்கவும் இணைந்து செயல்படுவோம். கரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ள வழிகாட்டுதல்களைப் பின்பற்றி வீட்டிலேயே பாதுகாப்பாக புத்தாண்டை கொண்டாட வாழ்த்துகிறேன்.

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: தெலுங்கை தாய் மொழியாகக் கொண்ட சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதிநல்வாழ்த்துகள். மனதளவில் ஒன்றுபட்டு நம் நாட்டின் ஆரோக்கியத்துக்கான கரோனா தடுப்பு பாதுகாப்புவழிமுறைகளை பின்பற்றி இந்த யுகாதியை கொண்டாடுவோம்.

முதல்வர் பழனிசாமி: யுகாதி திருநாளை உற்சாகத்துடன் கொண்டாடும் தெலுங்கு, கன்னட மொழி பேசும்மக்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள். தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் தங்கள் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக் காத்திடும்அதேவேளையில் பல நூற்றாண்டுகளாக தமிழ் மக்களோடு இரண்டறக் கலந்து, சகோதர, சகோதரிகளாய் ஒற்றுமையாய் வாழ்ந்து வருவது தமிழகத்துக்கு பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி: தமிழகத்தில் வசிக்கும் தெலுங்கு, கன்னட மொழி பேசும்அனைவருக்கும் யுகாதி புத்தாண்டு வாழ்த்துகள். இந்தியாவின் ஒற்றுமை மேலும் வலுப்பெறவும், பிரிவினை எண்ணங்களை வேரறுத்து தேச வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்நாளில் சபதமேற்க வேண்டுகிறேன்.

தமிழக பாஜக தலைவர் எல்.முருகன்: தமிழகத்தில் வாழும் தெலுங்கு, கன்னட மொழி பேசும்மக்கள் அனைவருக்கும் யுகாதி திருநாள் வாழ்த்துகள். இந்த இனியநாளில் அனைவரிடமும் வேற்றுமைகள் அகன்று ஒற்றுமை உணர்வு தழைத்தோங்க வாழ்த்துகிறேன்.

பாமக நிறுவனர் ராமதாஸ்: யுகாதி திருநாளைக் கொண்டாடும்சகோதர, சகோதரிகளுக்கு இதயங்கனிந்த வாழ்த்துகள். தமிழகத்தின் தொழில், பொருளாதார வளர்ச்சிக்குதெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்கள் பெருமளவில் பங்களித்துள்ளனர். தமிழர்களுக்கும், தெலுங்கு, கன்னட மொழி பேசும் மக்களுக்கும் இடையிலான ஒற்றுமையும், சகோதரத்துவமும் ஆல்போல் தழைத்தோங்க வேண்டும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்: யுகாதி என்ற சொல்லுக்கு புதிய யுகத்தின் ஆரம்பம் என்று பொருள். வரும் காலங்களில் கரோனாவின் தாக்கத்தில் இருந்து இந்நாடும், நாட்டு மக்களும் விடுபட்டு ஆரோக்கியமான புதிய யுகத்தினை காண வாழ்த்துகிறேன்.

பெரம்பலூர் எம்பி. பாரிவேந்தர்:தெலுங்கு, கன்னட இன மக்கள் தங்களுடைய பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் பேணிக்காத்து, தமிழ் மக்களோடு ஒற்றுமையுடன் இணைந்து வாழ்ந்து வருகின்றனர். இவர்களின் புத்தாண்டான யுகாதியை கொண்டாடும் அனைவருக்கும் வாழ்த்துகள்.

இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

மேலும், சு.திருநாவுக்கரசர் எம்பி,ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்டோரும் யுகாதி வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x