

கரோனா தடுப்பூசி போடும் இயக்கத்தை செயல்படுத்துவதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க மத்திய பாஜக அரச முயற்சிப்பதாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் குற்றம்சாட்டியுள்ளார்.
நாடு முழுவதும் கரோனா பரவல்அதிகரித்து வரும் நிலையில் தடுப்பூசி செலுத்துவதை விரைவுபடுத்த தடுப்பூசி திருவிழா இயக்கத்தை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன.
இந்நிலையில் கரோனா தடுப்பூசி இயக்கம் தொடர்பாக ப.சிதம்பரம் நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
மத்திய அரசு ஒருநாள் கரோனாதடுப்பூசி திட்டத்தை ‘திருவிழா’ என்று அழைக்கிறது. அடுத்த நாள்தடுப்பூசி இயக்கத்தை ‘இரண்டாவது போர்’ என்று அழைக்கிறது. இதில் எதை எடுத்துக்கொள்வது என்பது தெரியவில்லை.
கடந்த ஆண்டு முதல் ஊரடங்கை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தபோது, ‘18 நாட்கள் மகாபாரத போர் நடந்தது. கரோனாவுக்கு எதிரான போரை 21 நாட்களில் வெல்வோம்’ என்று கூறினார். ஆனால், நடந்தது என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.
வெற்றுப் பேச்சு, பெருமை பேசுவதால் கரோனாவுக்கு எதிரான போரில் வெற்றி பெற முடியாது. கரோனா தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்ட தோல்வியை மறைக்க மத்திய பாஜக அரசு முயற்சிக்கிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.