Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

வன்னியர் மீதான அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்க பாமக சார்பில் புதிய பரப்புரை இயக்கம்: ராமதாஸ் அறிவிப்பு

வன்னியர்கள் மீதான அவதூறுகளுக்கு பதிலடி கொடுக்க, இனமான உரிமை காப்பு அறிவுசார் பரப்புரை இயக்கம் தொடங்கப்படும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கை:

அரக்கோணம் சோகனூர் இரட்டைக் கொலை தொடர்பாக பாமக, வன்னியர் சமுதாயத்தின் மீது அவதூறுகள் அள்ளி வீசப்படுகின்றன. அடிப்படையற்ற அவதூறுகளை சில அரசியல் கட்சித் தலைவர்களும், ஊடக அறத்தை மதிக்காதசில ஊடகங்களும் ஆதரிப்பதும்,ஊக்குவிப்பதும் கண்டிக்கத்தக்கது. இந்தக் கொலைகளுக்கான காரணம் சாதியோ, தேர்தலோ, அரசியலோ இல்லை. கொலையானவர்களும், கொலை செய்யப்பட்டதாக கூறி கைது செய்யப்பட்டவர்களும் நீண்டகாலமாக நண்பர்களாக இருந்தவர்கள். கொலைநடப்பதற்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு வரை அவர்கள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது அருந்தியுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில்தான் இந்தக் கொலை நடந்திருக்கிறது. இதுதான் மறுக்க முடியாத உண்மை. இது குடிபோதையில் இருந்த இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதல்.

கொல்லப்பட்டவர்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அல்ல. கொலை செய்ததாக கூறப்படுபவர்கள் பாமகவினரும் அல்ல. கொல்லப்பட்ட இருவரும் புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்தவர்கள். இந்த மோதலின் பின்னணியில் அரசியல் இல்லை என்று அந்தக் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி கூறியிருக்கிறார்.

கடந்த சில ஆண்டுகளாகவே, யாரோ செய்த தவறுக்கு எல்லாம் வன்னியர்கள் மீது பழி போடலாம், அவர்களுக்கு ஆதரவாக பாமக குரல் கொடுத்தால் அதன் மீது சாதிமுத்திரை குத்தலாம் என்ற போக்குஅதிகரித்து வருகிறது. இது ஆரோக்கியமானது அல்ல. இப்போக்கை சம்பந்தப்பட்ட சக்திகள் உடனடியாக மாற்றிக்கொள்ள வேண்டும்.

இனிவரும் காலங்களில் வன்னியர்கள் மீது அவதூறுகள் பரப்பப்படும்போது அது தொடர்பான உண்மை நிலையை சம்பந்தப்பட்டவர்களுக்கு உணர்த்துவதற்காகவும், தீய பிற்போக்கு சக்திகளிடம் இருந்து வன்னிய மக்களை காக்கவும் அறிவுசார்ந்த பரப்புரைகளை மேற்கொள்ள வன்னியர் இன மான, உரிமை காப்பு அறிவுசார் பரப்புரை இயக்கம் தொடங்கப்படுகிறது. 22 முதல் 30 வயது வரையுள்ள பட்டதாரி இளைஞர்களும், இளம் பெண்களும் சேரலாம். இதில் சேர விரும்புபவர்கள் www.bit.ly/HateFreeTN என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம்.

அரக்கோணம் நிகழ்வு போன்றவற்றில் தேவையில்லாமல் வன்னியர் சமுதாயத்தை தொடர்புபடுத்தி, அவதூறு பரப்பும் கும்பலை முறியடிக்க ஆதரவு கொடுங்கள். இயக்கத்தின் நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள். பாமகமுன்னாள், இந்நாள் எம்.பி.,எம்எல்ஏக்கள் இதன் ஆலோசகர்களாக இருந்து வழிநடத்துவார்கள்.

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x