

மாலத்தீவுக்கு கடத்துவதற்காக, தூத்துக்குடி அருகே பண்ணைத் தோட்டத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.30 லட்சம் மதிப்பிலான ஹசீஸ் என்ற போதைப் பொருளை போலீஸார் பறிமுதல் செய்தனர். 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை கூட்டாம்புளி பகுதியில் உள்ள ஒரு பண்ணைத் தோட்டத்தில் போதைப் பொருள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கியூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர்கள் ஜீவமணி தர்மராஜ், வேலாயுதம் ஆகியோர் தலைமையிலான போலீஸார், நேற்று முன்தினம் இரவு அந்த பண்ணைத் தோட்டத்தில் சோதனை நடத்தினர்.
அங்கு 3 பாக்கெட்டுகளில் தலா 1 லிட்டர் வீதம் 3 லிட்டர் ஹசீஸ் எனப்படும் கஞ்சா எண்ணெய் இருந்தது. இதன் மதிப்பு ரூ.30 லட்சம். அதை பறிமுதல் செய்த கியூ பிரிவு போலீஸார், அங்கிருந்த திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ள நாகல்குளம் செல்லத்துரை மகன் பிரிட்டோ தூத்துக்குடி மாவட்டம் பண்ணைவிளை ராஜபாண்டி மகன் விக்டர் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
மாலத்தீவில் வேலை செய்யும் பிரிட்டோ, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்தியா வந்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் கோபாலபுரம் 4-வது தெருவில் அவர் அறை எடுத்து தங்கிஉள்ளார். தேனி மாவட்டத்தைச் சேர்ந்த கும்பலிடம் இருந்து, ஹசீஸ் போதைப் பொருளை வாங்கி வந்து தூத்துக்குடி வழியாக மாலத்தீவுக்கு பிரிட்டோ கடத்த திட்டமிட்டிருந்தது தெரியவந்தது.