Published : 13 Apr 2021 03:12 AM
Last Updated : 13 Apr 2021 03:12 AM

கோவையில் உணவகத்தில் வாடிக்கையாளர், ஊழியர்களை தாக்கிய உதவி ஆய்வாளர் இடமாற்றம்: காவல் ஆணையருக்கு மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

கோவையில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த வாடிக்கையாளர்கள், ஊழியர்களைத் தாக்கியஉதவி ஆய்வாளர் இடமாற்றம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையம், கோவை காவல் ஆணையருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கோவை காந்திபுரம், மத்திய பேருந்து நிலைய வளாகத்தில் சாஸ்திரி சாலையைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவருக்கு சொந்தமான உணவகம் உள்ளது. இங்கு நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் ஓசூரைச் சேர்ந்த பெண்கள் உட்பட 5 பேர் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். உணவகத்தின் ஷட்டர் பாதி இறக்கிவிடப்பட்டு இருந்தது.

அப்போது அங்கு வந்த காட்டூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்து, கடையை ஏன் இன்னும் திறந்து வைத்திருக்கிறாய் எனக் கூறி உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டு இருந்த வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களை லத்தியால் தாக்கியுள்ளார். மேலும், உணவகத்தில் இருந்த பொருட்களையும் அடித்து சேதப்படுத்தி உள்ளார்.

இதில் காயமடைந்த வாடிக்கையாளரான ஓசூரைச் சேர்ந்த ஜெயலட்சுமி மற்றும் கதிர்வேல், ஆறுமுகம், சதீஸ்குமார் ஆகியோர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உதவி ஆய்வாளர் முத்து, லத்தியால் தாக்குதலில் ஈடுபட்ட காட்சி அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட உணவகத்தின் உரிமையாளர் மோகன்ராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.நாகராஜன், மாநகர காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆகியோரிடம் நேற்று புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து, காவல் உதவி ஆய்வாளர் முத்துவை, மாநகர ஆயுதப்படைக்கு நேற்று காலை உடனடியாக மாற்றம் செய்து காவல் ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த சம்பவம்தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு, மத்திய உட்கோட்ட சட்டம் ஒழுங்குஉதவி ஆணையர் பிரேமானந்தனுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர், இந்த விவகாரம் தொடர்பாக நேற்று தொடர்புடைய உணவகத்தில் விசாரணை நடத்தினார். விசாரணை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட பின்னர், உதவி ஆய்வாளர் முத்து மீது அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக, உணவக உரிமையாளர் மோகன்ராஜ் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘அரசு இரவு 11 மணி வரை உணவகங்களை திறந்து வைக்க அனுமதித்துள்ளது. ஆனால், காட்டூர் காவல் நிலைய ஆய்வாளர் லதா இதற்கு எதிராக இரவு 10 மணிக்கே கடையை மூட வலியுறுத்துகிறார். உதவி ஆய்வாளர் முத்து, பெண்கள் என்றும் கூட பார்க்காமல், வாடிக்கையாளர், ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்துகிறார். உதவி ஆய்வாளர் முத்து மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

இந்த விவகாரம் தொடர்பான செய்திகளின் அடிப்படையில் தாமாக முன்வந்து, இவ்வழக்கை விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், கோவை மாநகர காவல்துறை ஆணையருக்கு நேற்று அனுப்பிய நோட்டீஸில், ‘‘உணவகத்தில் உள்ள ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி, 2 வார காலத்துக்குள் அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x