

விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும், பாமகவுக்கும் கொள்கைரீதியான கருத்து வேறுபாடே தவிர வேறு எதுவும் இல்லை. எனினும் எங்களைத் தனிமைப்படுத்தும் முயற்சி நடக்கிறது என திருமாவளவன் எம்பி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க அரசின் தற்போதைய கட்டுப்பாடுகளுக்கு மக்கள் ஒத்துழைக்க வேண்டும். கோயில் திருவிழாக்கள் தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவுக்குக் கட்டுப்பட வேண்டும்.
அரக்கோணம் அருகே கொலையான இரு இளைஞர்களின் குடும்பத்துக்கு அரசு தலா ரூ.4.30லட்சம் நிவாரணம் வழங்கியுள்ளது. ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு ரூ.8 லட்சம் நிதியும், குடும்பத்தினருக்கு 2 ஏக்கர் நிலமும் வழங்கப்படுகிறது. எனவே பாதிக்கப்பட்டோர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், நிலமும் வழங்க வேண்டும்.
பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குஎதிராக கருத்துகளைத் தெரிவித்து வருகிறார். பாமகவுடன் கொள்கைரீதியாக மட்டுமே எங்கள் கட்சிவேறுபடுகிறதே தவிர வேறு எதுவும்இல்லை.
தாழ்த்தப்பட்ட மக்களுக்கு விழியாகச் செயல்படும் எங்கள் இயக்கம் சாதி, மத, இனத்தைக் கடந்தது. எனினும் எங்களைத் தனிமைப்படுத்தும் முயற்சி நடக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.