

காங்கயம் அருகே ரூ.2 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டு வைத்திருந்தவரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே திருப்பூர் சாலை படியூர் சோதனைச் சாவடியில், காவல் உதவி ஆய்வாளர் சண்முகம் தலைமையிலான போலீஸார் நேற்று முன்தினம் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். வாகனப் பதிவு எண் பலகை இல்லாமல், இருசக்கர வாகனம் ஒன்று திருப்பூரை நோக்கிச் சென்றது. அந்த வாகனத்தை நிறுத்த முயன்றபோது, அதில் வந்த நபர் வண்டியை திருப்பி தப்பிச் செல்ல முயன்றார்.
அவரை போலீஸார் மடக்கிப் பிடித்து விசாரித்தனர். முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகமடைந்த போலீஸார், இருசக்கர வாகனத்தின் பெட்ரோல் டேங்க்கின் மீது உள்ள பையில் சோதனை செய்துள்ளனர். அதில், 39 எண்ணிக்கையில் ரூ.2000 நோட்டுகள், 83 எண்ணிக்கையில் ரூ.500 நோட்டுகள், 32 எண்ணிக்கையில் ரூ.200 நோட்டுகள், 31 எண்ணிக்கையில் ரூ.100 நோட்டுகள் என மொத்தம் ரூ.1 லட்சத்து 29 ஆயிரத்துக்கான கள்ள நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இவை அனைத்தும் கலர் ஜெராக்ஸ் இயந்த்திரம் மூலமாக நகல் எடுக்கப்பட்டவை. திருப்பூர்மாநகரில் புழக்கத்தில் விடுவதற்காக எடுத்துச் சென்றது தெரியவந்தது. இதை எடுத்து வந்தவர், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் கள்ளுக்கடை சந்து பகுதியைச் சேர்ந்த கண்ணன்(34) என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து, காங்கயம் போலீஸார் அவரை அழைத்துக் கொண்டு, கும்பகோணம் பகுதியிலுள்ள வீட்டுக்குச் சென்றனர். அங்கு வைக்கப்பட்டிருந்த ஜெராக்ஸ் எடுக்கும் இயந்திரம் மற்றும் 36எண்ணிக்கையில் ரூ.2000 ஜெராக்ஸ் தாள்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்து, காங்கயம் நீதிமன்றத்தில் நேற்று கண்ணனை ஆஜர்படுத்தி திருப்பூர் சிறையில் அடைத்தனர்.