

கரோனா தொற்று பரவலால் பார்வையாளர்களின்றி, உதகையில் 134-வது குதிரைப் பந்தயம் நாளை (ஏப்ரல் 14) தொடங்குகிறது என்று மெட்ராஸ் ரேஸ் கிளப் நிர்வாகத்தின் முதன்மை செயல் அலுவலர் டி.ராமன் தெரிவித்தார்.
இதுகுறித்து உதகையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நீலகிரி மாவட்டம் உதகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் தமிழ்ப் புத்தாண்டு அன்று தொடங்கி ஜூன் மாதம் வரை குதிரைப் பந்தயம் நடக்கும். இந்த ஆண்டு 134-வது குதிரைப் பந்தயம் நாளை (ஏப்ரல் 14) தொடங்கி ஜூன் மாதம் 11-ம் தேதி வரை நடக்கவுள்ளது. வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மொத்தம் 18 நாட்கள் பந்தயங்கள் நடக்கும். இதற்காக பெங்களூரு, சென்னை உட்பட பல்வேறு நகரங்களில் இருந்து 500 பந்தயக் குதிரைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. கரோனா தொற்று பரவல் காரணமாக அரசின் அறிவுறுத்தல்படி இந்த ஆண்டு முதல் முறையாக பார்வையாளர்கள் இல்லாமல் குதிரைப் பந்தயங்கள் நடக்கவுள்ளன.
முக்கிய பந்தயங்களான ‘தி நீல்கிரிஸ் 1000 கீனிஸ்’ கிரேட் 3 மே 7-ம் தேதியும்,‘தி நீல்கிரிஸ் 2000 கீனிஸ்’ கிரேட் 3 போட்டி மே 8-ம் தேதியும், ‘நீலகிரி டர்பி ஸ்டேக்ஸ்’ மே 21-ம் தேதியும் ‘நீலகிரி தங்கக் கோப்பை’ போட்டி மே 22-ம் தேதியும் நடக்கவுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிலையில், உதகையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யாவை, மெட்ராஸ் ரேஸ் கிளப் இயக்குநர் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா சார்பில் மேலாண்மை குழு உறுப்பினர்கள் ரமேஷ் ரங்கராஜன், அருண் அழகப்பன் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.
அப்போது, கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்ள மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதிக்கு ரூ.3 லட்சத்துக்கான காசோலையை வழங்கினர். அரசு தெரிவித்துள்ள கரோனா தொற்று வழிமுறைகளை முழுமையாக கடைபிடித்து உதகையில் குதிரைப் பந்தயம் நடத்தப்படும், பந்தயங்களில் பங்கேற்கும் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என மெட்ராஸ் ரேஸ்கிளப் நிர்வாகிகள் தெரிவித்தனர்.