

முதுமலையில் 40 ஆண்டுகளுக்கு பிறகு ஏராளமான இடங்களில் மூங்கில் அரிசி பூத்துக்கொட்டுகிறது. அவற்றை சேகரிக்கும் பணியில் பழங்குடியின மக்கள் ஆர்வமுடன் ஈடுபட்டு வருகின்றனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை வனப்பகுதிகளில் மூங்கில் செடிகள் அதிகளவில் காணப்படுகின்றன. நன்கு வளர்ந்து 40 ஆண்டுகள் முடிந்த பிறகே மூங்கில் செடிகளில் பூ பூக்கத் தொடங்கும். பூ பூத்த சில வாரங்களில் அரிசி கொட்டத்தொடங்கும். பின்னர் குறிப்பிட்ட நாட்களில் மூங்கில் செடிகள் காய்ந்துவிடும். இந்நிலையில் தொரப்பள்ளி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வனம் மற்றும் அதையொட்டிய சாலைகளில் உள்ள மூங்கில் செடிகளில் அரிசி கொட்டத் தொடங்கியுள்ளது.
மூங்கில் அரிசியை முக்கிய உணவாகக் கொண்ட பழங்குடியின மக்கள், அவற்றை சேகரிக்கத் தொடங்கியுள்ளனர்.
தங்கள் உணவுத் தேவைக்குபோக மீதமுள்ள அரிசியை கிலோ ரூ.500 வரை விற்பனை செய்கின்றனர். மூங்கில் அரிசியின் மருத்துவ குணம் தெரிந்த வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் நேரடியாக வந்து பழங்குடியின மக்களிடம் இருந்து அவற்றை வாங்கிச் செல்கின்றனர்.
இதுகுறித்து பழங்குடியின மக்கள் கூறும்போது ‘‘மூங்கில் அரிசியை அரைத்து பொடியாக்கி அதனை குழந்தைகளுக்கு கூழ் காய்ச்சி கொடுப்பதாலும், உணவாக எடுத்து கொண்டாலும் உடல் பலமும், நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும். மேலும் கார்போஹைட்ரேட்ஸ், புரதச் சத்து, மெக்னீசியம், காப்பர், ஜிங்க் உள்ளிட்ட பல சத்துகளும் இடம்பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்த உணவாகவும் மூங்கில் அரிசி உள்ளது’’ என்றனர்.