

உடுமலை நகராட்சி ஏரிப்பாளையத்தில் அரசுப் பள்ளி வளாகத்துக்குள் பயன்பாடு இல்லாத பொதுக்கழிப்பிடத்தை அகற்ற வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்குட்பட்ட ஏரிபாளையத்தில் நகராட்சி தொடக்கப் பள்ளி உள்ளது. இப்பள்ளி 1943-ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக மாணவர் எண்ணிக்கை குறைந்து, தற்போது 20 மாணவர்கள் மட்டுமே சேர்ந்துள்ளனர். தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர் ஆகியோர் மட்டுமே பணியில் உள்ளனர். தாங்கள் பயின்ற பள்ளியின் நிலை கண்ட முன்னாள் மாணவர்கள் சிலர் ஒருங்கிணைந்து, பள்ளியை புனரமைக்க முடிவு செய்துள்ளனர். தனியார் பள்ளிகளுக்கு இணையாக இப்பள்ளியின் தரத்தை மேம்படுத்தவும், ஸ்மார்ட் கிளாஸ் தொடங்குவது, புதிய விளையாட்டுகளை புகுத்துவது என பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வருகின்றனர்.
2020 மார்ச் முதல் கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால், அதே ஊரைச் சேர்ந்த முன்னாள் மாணவர்கள் சிலரின் முயற்சியில் பள்ளி வளாகத்தை சுத்தம் செய்தல், சுவருக்கு வர்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆங்கில வழி கல்வியை தொடங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி வளாகத்தில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக நகராட்சியால் கட்டப்பட்டு பயன்பாடின்றி பொதுக்கழிப்பிடம் உள்ளது. அதில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் புகுந்துள்ளதால், பள்ளி ஆசிரியர்களிடையே அச்சம் எழுந்துள்ளது. எனவே, அக்கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து முன்னாள் மாணவர்கள் கூறும்போது, "முறையான பராமரிப்பின்றி உள்ள அரசு பள்ளியை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்தோம். அப்போது, கொடிய விஷமுள்ள பாம்புகள் இருப்பதை அறிந்து அப்புறப்படுத்தினோம். அரசு உத்தரவுக்குப் பின் பள்ளிகள் திறக்கப்படும்போது, இப்பள்ளியில் மழலையர் வகுப்புகள் தொடங்க ஏதுவாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். அங்குள்ள பயன்பாடற்ற பொதுக்கழிவறை, இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, கழிவறை கட்டிடத்தை இடித்து அகற்ற நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து ஏற்கெனவே நகராட்சி அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என்றனர்.
நகராட்சி அதிகாரிகள் கூறும்போது, "இதுதொடர்பாக ஏற்கெனவே புகார் பெறப்பட்டுள்ளது. விரைவில் ஆய்வு செய்து பயன்பாடற்ற கட்டிடத்தை இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்" என்றனர்.