பேருந்தில் நின்று செல்ல அனுமதிக்கப்படாததால் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுடன் பயணிகள் வாக்குவாதம்

கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்க வேண்டும் என்ற கட்டுப்பாட்டால், அலுவலக நேரத்தில் கூட்ட நெரிசலை சமாளிக்க முடியாமல் போக்குவரத்து அதிகாரிகள் தவித்தனர். பேருந்தில் நின்று செல்ல அனுமதிக்கப்படாததால் பல இடங்களில் பயணிகளுக்கும் போக்குவரத்துக் கழக அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

தமிழகத்தில் கரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்து வருகிறது. கரோனாவை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடந்த சனி, ஞாயிறுகளில் கூட்டம் சற்று குறைவாக இருந்ததால், இந்த கட்டுப்பாட்டை செயல்படுத்துவதில் பெரிய அளவில் சிக்கல் இல்லாமல் இருந்தது.

அதிகாரிகள் ஆய்வு

இந்நிலையில் அலுவலகநாளான நேற்று, வழக்கம்போல்மாநகர பேருந்துகள் இயக்கப்பட்ன. பிராட்வே, தாம்பரம், கிண்டி, கோயம்பேடு, அடையார், பூந்தமல்லி, கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்களில் போக்குவரத்து அதிகாரிகள், ஆய்வுப் பணிகளை மேற்கொண்டனர். மாநகர பேருந்துகளில் இருக்கைகளில் அமர்ந்து மட்டுமே பயணிக்க பயணிகள் அனுமதிக்கப்பட்டனர். முகக்கவசம் இல்லாத பயணிகள் பேருந்தில் அனுமதிக்கப்படவில்லை. ஆனால், காலை 9 மணிக்கு பிறகு கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் போக்குவரத்து அதிகாரிகள் சிரமப்பட்டனர். பல்வேறு இடங்களில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால், பொதுமக்கள் சிலர் போக்குவரத்து கழக அலுவலர்கள், நடத்துநர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:

கரோனா பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி பேருந்துகளை இயக்கி வருகிறோம். சமூக இடைவெளியை பின்பற்றி, கூட்ட நெரிசலை குறைக்க அதிகாரிகளை நியமித்து ஆங்காங்கே ஆய்வு மேற்கொண்டு கண்காணித்து வருகிறோம். பேருந்துகளில் பயணிகள் நின்று கொண்டு வருவதை கண்டறிந்து அவர்களை இறக்கிவிடவும் நடவடிக்கை எடுக்கப்படுகின்றன.

ஆனால், அலுவலக நேரங்களில் மக்கள் கூட்டம் ஒரே நேரத்தில் கூடுவதை கையாளுவதில் நடைமுறை சிக்கல் உள்ளது. எனவே, மக்கள் தேவையற்ற பயணத்தை தவிர்க்கலாம். பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு தந்து, தங்களது பயணத்தை திட்டமிட வேண்டுமென அறுவுறுத்துகிறோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in