வனப் பகுதிகளில் விலங்குகளி்ன் தாகம் தீர்க்க தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணி

திருப்போரூரை அடுத்த காட்டூர் வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பும் வனத் துறை ஊழியர்கள்.
திருப்போரூரை அடுத்த காட்டூர் வனப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பும் வனத் துறை ஊழியர்கள்.
Updated on
1 min read

செங்கல்பட்டு, திருப்போரூர் வனப் பகுதிகளில் உள்ள விலங்குகளின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், வனப் பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகளில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு பகுதியில் 7,285 ஏக்கர், திருப்போரூரில் 5,350 ஏக்கர் பரப்பில் வனப் பகுதிகள் அமைந்துள்ளன. இங்கு சிறுத்தை, பல்வேறு மான் இனங்கள், கழுதைப்புலி, நரி, மயில் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. வனப் பகுதிகள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்படாமல் இருப்பதற்காக, வனத் துறையினர் சுழற்சி முறையில் ரோந்துப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், வனப் பகுதிகளில் விலங்குகளின் தண்ணீர் தேவைக்காக கசிவுநீர்க் குட்டை மற்றும் தண்ணீர்த் தொட்டிகளை ஆங்காங்கே அமைத்துள்ளனர். கோடைகாலம் தொடங்கியுள்ளதாலும், மழையின்மையாலும் வனப் பகுதிகள் வறண்டு காணப்படுகின்றன.

குடிநீரின்றித் தவிக்கும் விலங்குகள், வனப் பகுதி அருகேயுள்ள கிராமங்களுக்குள் புகுந்துவிடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளதால், அவற்றின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, வனப் பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் நீர் நிரப்பும் பணிகளை வனத் துறை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து திருப்போரூர் வனச்சரகர் கல்யாண் கூறும்போது, "வனப் பகுதிகளில் மழைப்பொழிவு குறைவு மற்றும் கோடைகாலம் தொடக்கம் காரணமாக, அங்குள்ள நீர்நிலைகள் வறண்டு, கடும் வறட்சி நிலவுகிறது. இதனால், விலங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் நுழைவதைத் தடுக்கவும், அவற்றின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யவும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையொட்டி, செங்கல்பட்டு, திருப்போரூரில் உள்ள அடர்ந்த வனப் பகுதிகளின் நடுவே அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில், டிராக்டர் மூலம் டேங்கர்களில் தண்ணீர் கொண்டு சென்று, தொட்டிகளை நிரப்பி வருகிறோம். சுழற்சிமுறையில் தொட்டிகளில் தொடர்ந்து நீர் நிரப்பத் திட்டமிட்டுள்ளோம். எனினும், மழை பெய்தால் மட்டுமே, வன விலங்குகளின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்ய முடியும்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in