

சென்னையில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியதாவது:
மழையால் வந்த துன்பம் ஒருபுறம் இருக்க, ஏரிகளிலிருந்து வந்த நீரும் மக்களின் வாழ்வை புரட்டிப்போட்டுள்ளன. இதுவரை சேர்த்த பொருட்களையும் மக்கள் இழந்துள்ளனர். பலர் கல்விச் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்தையும் இழந்துள்ளனர். இனி எதிர்காலம் எப்படி இருக்குமோ என மக்கள் துயரத்தில் ஆழ்ந்துள்ளனர்.
ஆனாலும், இப்பெரும் வெள்ளம் மக்களிடம் இருந்த மனிதநேயத்தை வெளிக்கொண்டு வந்துள்ளது. ஜாதி, மதம், அரசியல் வேற்றுமைகளை ஒதுக்கி வைத்துவிட்டு உதவிக்கரம் நீட்ட ஒவ்வொருவரும் ஓடிவந்த காட்சியை கண்டு இந்தியாவே வியந்து நிற்கிறது. குறிப்பாக நாட்டின் எதிர்கால சொத்தான இளைஞர் சமுதாயம் நிவாரணப் பணிகளில் காட்டிய வேகம் நம்பிக்கை அளிக்கிறது.
மக்களுக்கான நிவாரணப் பணிகள் நின்று விடாமல் தொடர வேண்டும். நம்மை காக்க தமிழ்ச் சமுதாயம் இருக்கிறது என்ற நம்பிக்கை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வர வேண்டும்.
எனவே, டிசம்பர் 28-ம் தேதி எனது பிறந்த நாளை டிஜிட்டல், பேனர், போஸ்டர் என ஆடம்பரமாக கொண்டாடாமல் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ வேண்டும் என்றார்.