இருசக்கர வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: பணியாளர்களுக்கு கொடுத்த சம்மனை திரும்ப பெற்ற போலீஸார்

இருசக்கர வாகனத்தில் கொண்டுசெல்லப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்: பணியாளர்களுக்கு கொடுத்த சம்மனை திரும்ப பெற்ற போலீஸார்
Updated on
1 min read

இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டுசென்ற விவகாரத்தில், தேர்தல் பணியாளர்கள் 4 பேருக்கு கொடுத்த சம்மனை போலீஸார் திரும்பப் பெற்றனர்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 6-ம் தேதி நடைபெற்றது. அப் போது, சென்னை வேளச்சேரி தொகுதிக்கு உட்பட்ட, தரமணி 100 அடி சாலையில் அமைந்துள்ள பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடி மையத்திலிருந்து 3 ஊழியர்கள் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்றனர்.

இதைப் பார்த்த பொதுமக்கள் அவர்களைப் பிடித்து, வேளச் சேரி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். தகவலறிந்து வந்த தேர்தல் ஆணைய அதிகாரிகள், இதுகுறித்து விசாரணை நடத்தினர். இதில், பிடிபட்டது தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி ஊழியர்கள் என்பதும், அந்த இயந்திரம் வாக்குப்பதிவுக்கு முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை என் பதும் தெரியவந்தது.

எனினும், கவனக்குறைவாக வும், அலட்சியமாகவும் இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவுஇயந்திரத்தை கொண்டுசென்ற தால், சென்னை தேர்தல் அதிகாரிபிரகாஷ் உத்தரவுபடி இரு மாநகராட்சி ஊழியர்கள், ஒரு மெட்ரோ குடிநீர் பணியாளர் ஆகிய 3 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இதற்கிடையில், வேளச்சேரி தொகுதி தேர்தல் அதிகாரி கொடுத்த புகாரின் அடிப்படையில், இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கொண்டுசென்றது தொடர்பாக விசாரணை நடத்த, சம்பந்தப்பட்ட பள்ளியில் தேர்தல் பணியில் ஈடுபட்ட மாநகராட்சி உதவிப் பொறியாளர் செந்தில்குமார், ஊழியர்கள் வேளாங்கண்ணி, சரவணன், மாநகராட்சி ஒப்பந்த ஊழியர் வாசுதேவன் உட்பட 4 பேர் ஏப்ரல் 12-ம் தேதி (நேற்று) காலை 10 மணிக்கு வேளச்சேரி காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி, வேளச்சேரி போலீஸார் சம்மன் அனுப்பியிருந்தனர்.

இந்நிலையில், அவர்கள் நால்வருக்கும் கொடுக்கப்பட்ட சம்மனை போலீஸார் திரும்பப் பெற்றனர்.

தேர்தல் ஆணையம் விசாரணை அறிக்கையைப் பெற்று, டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பியதால், சம்மனை திரும்பப் பெறப்பட்டதாக தகவல் வெளியானது.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது, "இந்த சம்பவம் கவனக்குறைவால்தான் நடந்துள்ளது. இதில் குற்ற முகாந்திரம் இல்லை. இதையடுத்து, உயரதிகாரிகள் அறிவுறுத்தலின்பேரில், மாநகராட்சி உதவிப் பொறியாளர் உள்ளிட்ட 4 பேருக்கும் அனுப்பப்பட்ட சம்மன் திரும்பப் பெறப்பட்டது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in