

தமிழக முதல்வர் வீடு அமைந்துள்ள சாலையில் உள்ள பறக்கும் ரயில் நிலைய வளாகத்தில், எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது.
தமிழக முதல்வர் கே.பழனிசாமியின் வீடு அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ளது. அந்த சாலையில் உள்ள பறக்கும் ரயில் நிலைய வளாகத்தின் அருகே சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.
அப்போது, சிறுவர்கள் அடித்த பந்து ரயில் நிலைய வளாகத்துக்குள் விழுந்துள்ளது. அதை எடுக்கச் சென்றபோது, அங்கு மனித எலும்புக்கூடு ஒன்று கிடந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுவர்கள், இதுகுறித்து ரயில்வே போலீஸாருக்குத் தகவல் கொடுத்துள்ளனர். இதற்கிடையில், தகவலறிந்து வந்த அபிராமபுரம் போலீஸார், எலும்புக்கூடை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். தற்போது அது தடயவியல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இறந்து கிடந்தது யார், அடித்துக் கொலை செய்யப்பட்டு, சடலம் அங்கு வீசப்பட்டதா என்றெல்லாம் பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
எலும்புக்கூடு கிடந்த இடம் ரயில்வே பாதுகாப்பு படை விசாரணை எல்லைக்கு உட் பட்டதா அல்லது அபிராமபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியா என்பதில் முதலில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. எனினும், இறுதியில் அபிராமபுரம் போலீஸாரே வழக்கு பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.