

நாளை தொடங்கும் மீன்பிடி தடைக்காலத்தை 45 நாட்களாக குறைத்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைமுறைப்படுத்த வேண்டும் என மீனவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத் துள்ளனர்.
தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983-ன் கீழ், தமிழகத்தின் கிழக்கு கடற்பகுதியில் மீன்கள் இனப்பெருக்கத்தைக் கருதியும், மீன்வளத்தைப் பாதுகாக்கும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி அதிகாலை 12 மணி வரை (2 மாதங்கள்) 61 நாட்களுக்கு விசைப்படகுகள் மற்றும் இழுவைப் படகுகளைக் கொண்டு கடலில் மீன்பிடிக்கத் தடை விதிக்கப்பட்டு மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் அடிப்படையில் வரும் 14-ம் தேதி அதிகாலை 12 மணி முதல் ஜூன் மாதம் 14-ம் தேதி அதிகாலை 12 மணி வரை 61 நாட்களுக்கு கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூர் ஆகிய 14 கடற்கரை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் விசைப்படகுகள், இழுவைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கச் செல்லக் கூடாது.
இது குறித்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநிலப் பொதுச்செயலர் ஏ.தாஜுதீன் கூறிய தாவது:
கரோனா பரவல் காரணமாக மீனவர்கள் கடந்த ஆண்டு அரசு அறிவுரைப்படி மீன்பிடிக்கச் செல்லவில்லை. இதனால் தொடர்ச்சியாக 4 மாதங்கள் மீனவர்கள் வேலை இழந்தனர். மேலும் விசைப்படகு மீனவர்களால் பிடிக்கப்படும் இறால், கணவாய், நண்டு உள்ளிட்ட ஏற்றுமதி தரமிக்க மீன்களுக்கு 50 சதவீத விலையே கிடைக்கிறது.
இந்நிலையில் மீன்பிடி தடைக்காலம் நாளை தொடங்க உள்ளதால் மீனவர்களின் வாழ்வாதாரம் மேலும் மோசமாகி விடும். எனவே இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலத்தை 45 நாட்களாக குறைத்து அக்டோபர், நவம்பர் மாதங்களில் அமல்படுத்த வேண்டும் என்றார்.