Published : 13 Apr 2021 03:13 AM
Last Updated : 13 Apr 2021 03:13 AM

திருவெறும்பூர் அருகே கிளியூர் குளத்தில் வலசை வந்துள்ள அரிய பறவைகள்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகிலுள்ள கிளியூர் குளத்துக்கு ஏராளமான அரிய வகை பறவைகள் தற்போது வலசை வந்துள்ளன.

பறவைகள் உணவு தேடியும், இனப்பெருக்கத்துக்காகவும், தட்பவெப்ப சூழ்நிலை மாறுபாடுகளை எதிர்கொள்ளவும் பல்வேறு நீர்நிலைகளைத் தேடி ஆண்டுதோறும் வலசை வருகின்றன. இதில் உள்நாட்டுப் பறவைகள் மட்டுமன்றி, வெளிநாட்டுப் பறவைகளும் அடங்கும்.

தற்போது கிளியூரில் வழக்கமாக வலசை வரும் நீலச்சிறவி வாத்து (Garganey), ஆண்டி வாத்து (Northern Shoveller) போன்ற பறவைகளுடன் உள்நாட்டில் வலசை வரும் பெரிய பூ நாரைகள் (Greater Flamingos), கூழைக்கடாக்கள் (Pelicans), கரண்டி வாயன்கள் (SpoonBills) ஆகியவற்றுடன் நத்தைக் கொத்தி நாரை (Open Billed Stork), அரிவாள் மூக்கன் (Ibis) மற்றும் கருவால் மூக்கன் (Black-tailed Godwit) உள்ளிட்ட பல்வேறு பறவைகள் வலசை வந்துள்ளன.

இதுகுறித்து திருச்சி பறவைகள் நலச் சங்கச் செயலாளர் பாலா பாரதி ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது:

கிளியூர் குளத்தில் ஐரோப்பா நாட்டைச் சேர்ந்த கருவால் மூக்கன், ஆண்டி வாத்து மற்றும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பெரிய பூ நாரைகள் உள்ளிட்ட பறவைகள் காணப்படுகின்றன. குளத்தில் போதுமான அளவுக்கு தண்ணீர் இருப்பதால் உள்நாட்டுப் பறவைகளும் இங்கு வந்துள்ளன.

குறிப்பாக கருவால் மூக்கன் பறவைகள் வலசை பயணத்தின்போது எங்கும் நிற்காமல் நீண்ட தூரம் பறக்கும் திறன் கொண்டது.

2007-ல் நியூசிலாந்து வடக்கு தீவில் உள்ள மிராண்டா என்ற இடத்திலிருந்து புறப்பட்ட பெண் கருவால் மூக்கன் பறவை ஒன்று ஏறத்தாழ 6,300 மைல் தூரத்தில் உள்ள சீனாவின் யாலு ஜியாங் என்ற இடத்தை 8 நாட்களில் அடைந்தது. பின்னர் 5 வார ஓய்வுக்கு பின்னர் அங்கிருந்து புறப்பட்டு 4,500 மைல் தொலைவில் உள்ள மேற்கு அலாஸ்காவின் யூகான்- குஷாக்வின் முகத்துவாரத்தை அடைந்தது. அந்த இடம் தான் அது இனப்பெருக்கம் செய்யும் இடமாகும். இனப் பெருக்கத்துக்கு பிறகு அங்கிருந்து புறப்பட்டு வேறு பாதையில் 7,200 மைல் தூரம் நிற்காமல் பறந்து எட்டரை நாட்களில் புறப்பட்ட இடமான மிராண்டாவை அடைந்தது. இது செயற்கைக்கோள் உதவியுடன் கண்டறியப்பட்டது.

இவ்வாறு வரும் பறவைகளை நாம் பாதுகாக்க வேண்டும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x