

புதூர் வட்டாரம் கீழக்கரந்தை முதல் அயன்வடமலாபுரம் வரை சுமார் 5 கி.மீ தூரமுள்ள பாதையை இரண்டு கிராம மக்களும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாதையில் மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கியது. இதனால் வாகனங்களில் பயணிப்பது சிரமமாக இருந்தது. தார்ச்சாலை அமைத்து தர மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த 2015-ம் ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் கீழ்புதிதாக தார்ச்சாலை அமைக்கப்பட்டது. அதன் பின் மழைக்கால பிரச்சினை இல்லை. இதற்கிடையே இச்சாலை சேதமடைந்ததால், புதிதாக தார்போட்டு சாலை சீரமைக்கப்பட்டு வருகிறது.
ஆனால், சாலையின் இருபுறமும் சரள் மண் அணைக்கப்படாமல், விவசாய நிலங்களில் மண்எடுத்து அணைக்கப்பட்டு வருகிறது. இதனால் விவசாய நிலங்களில் கால்வாய் வெட்டியது போல்உள்ளது. இதுபோன்ற செயலால்விவசாய பணிகள் மேற்கொள்ள சிரமம் ஏற்படும் என, விவசாயிகள் தரப்பில் புகார் தெரிவிக்கப்படுகிறது.
கரிசல்பூமி விவசாயிகள் சங்கத்தலைவர் அ.வரதராஜன் கூறும்போது, “சாலை பணியில், சாலையின் இருபுறமும் பக்கவாட்டில் ஒரு மீட்டர் அகலத்துக்கு சரள்மண் அணைக்கப்பட வேண்டும். இதற்கும் ஒப்பந்தத்தில் உரிய நிதி குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், விவசாய நிலங்களில் பள்ளம் தோண்டி மண் எடுத்து பயன்படுத்துகின்றனர். பள்ளம் தோண்டப்பட்டதால் சாலை நெடுகஇருபுறமுள்ள விவசாய நிலங்களுக்கு செல்ல முடியாத நிலைஏற்பட்டுள்ளது. மேலும், மழைக்காலங்களில் இந்த பள்ளங்களில் தேங்கும் மழை நீரால் பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும்.
சாலையின் கீழ்புறம் 3 மீதூரத்தில் இருக்கன்குடி நீர்தேக்கத்தில் இருந்து விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்லக்கூடிய கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கால்வாயில் இருந்து கான்கிரிட் கற்களை முழுவதுமாக உடைத்தெடுத்து, அதனை சாலையின் பக்கவாட்டில் போட்டுள்ளனர். பல கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்வாயையும் முற்றிலும் சேதப்படுத்திவிட்டனர். சாலைப்பணிகளை அதிகாரிகள் முறையாக கண்காணிக்க வேண்டும். கால்வாயை சீரமைத்து தர வேண்டும்” என்றார் அவர்.