

எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் டாக்டர் மீது தாக்குதல் நடத்தியவரை கைது செய்ய வலியுறுத்தி மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தரமணியை சேர்ந்தவர் மணி கண்டன். இவரது 2 மாத ஆண் குழந்தை சபரி. உடல்நிலை சரியில் லாமல் இருந்த சபரியை சில நாட்களுக்கு முன்பு சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்தார் மணிகண்டன். குழந்தைக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சிகிச்சை பலனின்றி குழந்தை இறந்தது.
டாக்டர்கள் சரியான முறையில் சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்துவிட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டி மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். குழந்தை இறந்ததால் வருத்தத்தில் இருந்த மணிகண்டன், அந்த வழி யாக வந்த முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவரும் டாக்டருமான தினேஷ் என்பவரை அடித்ததாக கூறப்படுகிறது.
உடனே டாக்டரை தாக்கியவரை கைது செய்ய வலியுறுத்தி 100-க் கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ பட்ட மேற்படிப்பு மாணவர்கள் பணியை புறக்கணித்து எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் நேற்று உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த மருத்துவ மனை இயக்குநர் சுந்தரி, சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவ மனை டீன் ஆர்.விமலா ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து மாணவர்கள் போராட்டத்தை கை விட்டனர். மாணவர்கள் கொடுத்த புகாரின் படி எழும்பூர் போலீஸார் தமிழ்நாடு மருத்துவமனை பாது காப்பு சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அரசு டாக்டர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் (எஸ்டிபிஜிஏ) ஒருங்கிணைப்பு செயலாளர் ஏ.ராமலிங்கம், நிர்வாகி கள் பழனிச்சாமி, சம்பத்குமார் ஆகியோர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு கொடுத்துள்ளனர்.