Published : 12 Apr 2021 08:50 PM
Last Updated : 12 Apr 2021 08:50 PM

சித்திரைத் தேர் செல்வதற்காக அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைப்பில் உருவமான மதுரை மாசி வீதி சாலை: 100 டன் வாகன எடையை தாங்கும் திறன் கொண்டது

மதுரை

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள மாசி வீதிகளில் 100 டன் எடையுள்ள வாகனங்கள் செல்லக்கூடிய அளவிற்கு அண்ணா பல்கலைக்கழகம் வடிவமைத்த ‘சிமென்ட் கான்கீரிட்’ சாலை போடப்பட்டுள்ளது.

உலகப் புகழ்பெற்ற மீனாட்சியம்மன் கோயிலை மையமாகக் கொண்டு மதுரை மாநகராட்சியில் ரூ.976 கோடியில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டம் நிறைவேற்றப்படுகிறது.

இந்த திட்டத்தில் இந்தக் கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதிகள், மூலஆவணி வீதிகள், மாசி வீதிகளில் பாதாள சாக்கடை, மழைநீர் வடிகால் வசதிகளுடன் கூடிய மின் வயர் இல்லாத போக்குவரத்து நெரிசல் இல்லாத விசாலமான ‘ஹைடெக்’ சாலைகளாக அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த சாலை அமைக்கும் பணிகள் கடந்த 2 ஆண்டாக நடந்தது. அதனால், மக்கள் மீனாட்சியம்மன் கோயிலுக்கும், கோயிலை சுற்றியுள்ள வியாபார நிறுவனங்களுக்கு ஷாப்பிங் செல்ல முடியாமலும் தவித்தனர்.

கடந்த ஆண்டு கரோனா ஊரடங்கால் இப்பணிகள் 6 மாதத்திற்கு மேலாக தடைபட்ட நிலையில் இந்த ஆண்டு மீனாட்சியம்மன் சித்திரைத் திருவிழாவுக்கு முன் முடிக்க இந்த சாலைப்பணிகள் தீவிரமாக நடந்தது.

கோயிலை சுற்றியுள்ள சித்திரை வீதியில் கருங்கல் ஸ்டோன் சாலையும், மூல ஆவணி வீதிகளில் பேவர் பிளாக் கற்கள் சாலையும், மாசி வீதியில் சிமென்ட் கான்க்கிரீட் சாலையும் அமைக்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த சாலைப்பணிகள் முடிந்தநிலையில் சித்திரைத்திருவிழா ரத்து செய்யப்பட்டதாவும், திருவிழா பக்தர்களை அனுமதிக்காமல் கோயில் வளாகத்தில் நடப்பதாகவும் ஆட்சியர் அன்பழகன் அறிவித்ததால் இந்த திருவிழாவை மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த மக்கள், வியாபாரிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

ஆனாலும், திருவிழாவுக்காக மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி நடந்த ‘ஸ்மார்ட் சிட்டி’ சாலைகள் தற்போது பொதுமக்கள், வியாபாரிகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

இன்னும் கம்பியில்லாத மின்சாரம் அமைக்கும் பணிகள் முடியவில்லை. மழைநீர் வடிகால், பாதாள சாக்கடைப் பணிகளையும் விரைவில் முழுமையாக நிறைவடையும் என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதில், மாசி வீதிகளில் பிரம்மாண்டமாக போடப்பட்டுள்ள ‘கான்க்கிரீட் சிமெண்ட்’ ரோடுகள் அனைவர் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ஒவ்வோர் ஆண்டும் சித்திரைத் திருவிழாவின்போதும், இந்த சாலை தேர்கள் செல்வதற்காக புதிதாக போடப்படும். இதற்காக மாநகராட்சி ஆண்டுதோறும் தனியாக நிதி ஒதுக்கீடு செய்யும்.

‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் நிரந்தரமாக தேர்கள் செல்லக்கூடிய வகையில் 100 டன் எடையுள்ள வானகங்கள் செல்லும் அவளவிற்கு அண்ணா பல்லைக்கழகம் வடிவமைத்த ‘சிமென்ட் கான்க்கிரீட்’ சாலை போடப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘மீனாட்சியம்மன் கோயில் தேர் ஒன்று 40 டன் எடையும், மற்றொரு சிறிய தேர் 20 டன் எடையும் கொண்டது. இந்த தேர்கள் மட்டுமில்லாது 100 டன் எடையுள்ள வானங்கள் சென்றாலும் இனி இந்த ரோடு சேதமடையாது.

புதிதாக ஒவ்வோர் ஆண்டும் ரோடு போட வேண்டிய அவசியமும் இனி இல்லை. அந்தளவுக்கு அண்ணா பல்கலைக்கழகம் அறிவுறுத்திய புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் வல்லுநர்களை கொண்டு இந்த சிமென்ட் கான்க்கிரீட் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த சாலையில் ஏற்கெனவே பல்வேறு வியாபார நிறுவனங்கள் உள்ளதால் அதற்கு பொருட்களை இறக்குவதற்காக அதிக பாரமுள்ள வாகனங்கள் வந்த செல்லும்.

அதனாலேயே, இந்த சாலைகள் அடிக்கடி பழுதடைந்து தேர்த் திருவிழாவுக்காக புதிதாக போடுவோம். தற்போது அதையும் கருத்தில் கொண்டே தரமான சாலையாக இந்த ‘சிமென்ட் கான்க்கிரீட்’ சாலை அமைக்கப்பட்டுள்ளது, ’’ என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x