

2018-ல் கஜா புயல், 2019-ல் மக்களவைத் தேர்தல், கடந்த இரு ஆண்டுகளாக கரோனா தொற்று போன்றவை திருவிழாக் காலங்களில் வந்ததால், 3.5 லட்சம் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக நாட்டுப்புறக் கலைஞர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
கரோனா 2-வது அலை அதிதீவிரமாகப் பரவி வருவதால் ஏப்.10-ம் தேதியில் இருந்து கோயில்களில் திருவிழாக்களை நடத்த மீண்டும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு கட்டுப்பாடுகளையும் தமிழக அரசு விதித்தது. கலை நிகழ்ச்சிகளை நடத்தாததால் நாட்டுப்புறக் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
எனவே, நாட்டுப்புற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி புதுக்கோட்டையில் நாட்டுப்புறக் கலைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு கலைஞர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலகம் அருகே கோரிக்கையை வலியுறுத்தி நாட்டுப்புறக் கலைஞர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் புதுக்கோட்டை ஆக்காட்டி ஆறுமுகம் தலைமையில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட முயன்றனர்.
இதற்கு போலீஸார் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, அங்கு வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து, கலைஞர்கள் அனைவரும் ஆட்சியர் அலுவலகம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது, கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர், ஆட்சியர் பி.உமா மகேஸ்வரியிடம் கோரிக்கை மனுவை அளித்துவிட்டு, கலைந்து சென்றனர்.
இந்தப் போராட்டத்தில், நாடகக் கலைஞர்கள், மேடைக் கலைஞர்கள், மெல்லிசைக் கலைஞர்கள், நாட்டியக் கலைஞர்கள், கிராமிய, கரகாட்டக் கலைஞர்கள், பேண்டு வாத்தியக் கலைஞர்கள், கிராமிய நையாண்டிக் கலைஞர்கள், ஒலி- ஒளி அமைப்பாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதுகுறித்து ஆக்காட்டி ஆறுமுகம் கூறும்போது, ''கடந்த 2018-ல் கஜா புயல், 2019-ல் மக்களவைத் தேர்தல், கடந்த ஆண்டில் இருந்து கரோனா தொற்று போன்றவை திருவிழாக் காலங்களில் வந்ததால், திருவிழாவை நம்பி தமிழகத்தில் தொழில் செய்து வரும் 3.5 லட்சம் கலைஞர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, கரோனா பரவலால் திருவிழாவை முழுமையாக ரத்து செய்துள்ள நிலையிலும், இரவு 10 மணி வரை கோயில்களில் பக்தர்களை அனுமதித்துத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இரவு 10 மணி வரை கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி கலை நிகழ்ச்சிகளை நடத்த அனுமதிக்க வேண்டும். குடும்பத்துக்குச் சொற்ப ரூபாயை அரசு நிவாரணமாகக் கொடுப்பதால் எங்களது வாழ்வாதாரத்தை முழுமையாகப் பூர்த்தி செய்ய முடியாது. எனவே, தமிழக அரசு இந்தக் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும்'' என்று ஆக்காட்டி ஆறுமுகம் தெரிவித்தார்.