

மதுரை மத்திய சிறையில் 18 ஆண்டுக்கு மேல் சிறைவாசம் அனுபவித்து வரும் சென்னையைச் சேர்ந்தவரை முன்கூட்டியே விடுவிக்கக்கோரும் மனுவை உள்துறை செயலர் பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னையைச் சேர்ந்த கோவிந்தம்மாள், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
என் மகன் பிரகாஷ் (41). இவரை கொலை வழக்கில் 1997-ல் நந்தம்பாக்கம் போலீஸார் கைது செய்தனர். இந்த வழக்கில் 2003-ல் அவருக்கு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். 18 ஆண்டுகள் 5 மாதங்களாக சிறையில் இருந்து வரும் பிரகாஷ், சிறையிலிருந்தபடி பிபிஏ, எம்பிஏ, எம்காம் பட்டம் பெற்றுள்ளார்.
இந்நிலையில் எனக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. எனது சிறுநீரகங்கள் பாதிப்படைந்துள்ளன. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர். எனவே, என் மகனை முன்கூட்டியே விடுதலை செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் கே.கல்யாணசுந்தரம், ஜி.இளங்கோவன் அமர்வு விசாரித்து, மனுதாரரின் மனுவை தகுதி மற்றும் முன்னுரிமை அடிப்படையில் உள்துறை செயலர் பரிசீலித்து 8 வாரத்தில் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டது.